Published : 01 Jan 2021 10:06 PM
Last Updated : 01 Jan 2021 10:06 PM
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (2-ம் தேதி) முதல் திமுக சார்பில் அடுத்தடுத்து மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (டிசம்பர் 1-ம் தேதி) இரவு 8.30 மணிக்கு கோவைக்கு வந்தார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கவில்லை.
முன்னதாக, கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக கொறடா சக்கரபாணி, மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, தென்றல் செல்வராஜ், பையா என்ற கிருஷ்ணன், சேனாதிபதி மற்றும் சி.ஆர்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் முபாரக், திருப்பூர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, காந்திராஜன், என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இன்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை (2-ம் தேதி) காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபியில் நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT