Published : 01 Jan 2021 09:13 PM
Last Updated : 01 Jan 2021 09:13 PM
‘‘கட்டாயத் திருமணம் போன்றது அதிமுக, பாஜக உறவு,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
நகர்த் தலைவர் கணேசன் வரவேற்றார். கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ, எஸ்.சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: அதிக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும். பாஜக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
அவர்களது திட்டங்களை மக்கள் ஏற்க தயாராக இல்லை.
வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை.
இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் தான் பாஜக வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் இக்கட்சிக்கு வளர்ச்சி இல்லை. தேசியமும், திராவிடமும் இணைந்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் எக்காலத்திலும் பாஜக துளிர்க்க முடியாது. பாஜக விஷச்செடி போன்றது.
தமிழகத்தில் பாஜக காலூன்றினால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. அந்த கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது.
தொடர்ந்து மத்திய அரசு தவறுகளை விமர்சிப்பேன். 2024-ம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் பிரச்சாரத்திற்கு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT