Published : 01 Jan 2021 07:19 PM
Last Updated : 01 Jan 2021 07:19 PM
கோவை அருகே நான்கு உள்ளாட்சிகளின் கீழ் வரும் கிராமத்தை ஒரே உள்ளாட்சியுடன் இணைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு இன்று கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே, பொன்னாண்டாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்துக்குட்பட்ட பகுதி 4 உள்ளாட்சி அமைப்புகள், 2 சட்டப்பேரவை தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. அதாவது, இந்த கிராமத்தின் குறிப்பிட்ட பகுதி அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியிலும், நீலகிரி மக்களவைத் தொகுதியிலும் வருகிறது.
மீதம் உள்ள இடங்கள் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும், கோவை மக்களவைத் தொகுதியிலும் வருகிறது. அதேபோல், கிராமத்தின் கிழக்குப்பகுதி கணியூர் ஊராட்சியிலும், தெற்குப்பகுதி அரசூர் ஊராட்சியிலும், வடக்குப்பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியிலும், மேற்குப்பகுதி அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாரணாபுரம் ஊராட்சியிலும் அமைந்துள்ளது.
அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல்
ஒரு கிராமம் பல்வேறு உள்ளாட்சி சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளின் கீழ் வருவதால், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் தேவைற்ற அலைச்சல்களுடன், அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அத்தியாவசியமான ரேஷன் கார்டு, ஆதார் அட்டை பெறுவதிலம், பாஸ்போர்ட் பெறுவதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மேற்கண்ட கிராமத்தை ஏதாவது ஓர் உள்ளாட்சியில் முழுவதுமாக இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொன்னாண்டம்பாளையம் கிராம மக்கள் இன்று (1-ம் தேதி) புத்தாண்டைப் புறக்கணித்து, தங்களது வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினர்.
தாமதமாகும் முடிவு
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ''ஒரு கிராமம் பல்வேறு உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதியில் வருவதால், அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பெறுவதில் இடையூறுகள் ஏற்படுகின்றன. பொன்னாண்டம்பாளையம் கிராமத்தைக் கணியூர் ஊராட்சியில் இணைப்பது எனக் கடந்த 2015-ம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அமல்படுத்தப்படாமல் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
எல்லைப் பிரச்சினையால், அரசு அலுவலகங்களுக்கு மாறி மாறி மக்கள் அலைய வேண்டியுள்ளது. இக்கிராமத்தை ஏதாவது ஒரு உள்ளாட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி முதற்கட்டமாக இன்று கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 6-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT