Published : 01 Jan 2021 05:51 PM
Last Updated : 01 Jan 2021 05:51 PM

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் நள்ளிரவு விபத்துகளில் மாணவன் உட்பட 2 பேர் பலி: 40 பேர் காயம்

சென்னை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி மாணவன் உட்பட 2 பேர் பலியானார்கள், 40 பேர் காயமடைந்தனர்.

புத்தாண்டு என்றாலே மது அருந்தி விட்டு 31-ம் தேதி மாலையிலிருந்து சாலையில் பறப்பதும், பப், பாருக்கு சென்று மேலும் குடித்து ஆட்டம் போட்டு பின்னர் சாலையில் பைக் ரேஸ் அல்லது வேகமாக மதுபோதையில் வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்கி உயிரிழப்பது அல்லது அப்பாவிகள் உயிரிழப்புக்கு காரணமாக அமைவது ஆண்டுதோறும் சில ஆர்வக்கோளாறுகளால் வாடிக்கையாக நடக்கும் ஒன்று ஆகும்.

புத்தாண்டு இரவில் இதற்காகவே போலீஸார் அதிக அளவில் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள், பாலங்கள் அடைக்கப்படும். புத்தாண்டு நள்ளிரவில் கூடும் பொதுமக்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களின் வேகங்களை குறைக்கவும் சாலைத்தடுப்புகளை அமைத்து அமைதி ஏற்படுத்தும் அனைத்து செயல்களிலும் ஈடுபடுவார்கள். ஆனாலும் இதையெல்லாம் மீறி விபத்துகள் நடந்துவிடும்.

இந்த ஆண்டு கரோனா தொற்று மற்றும் புதிதாக பரவும் உருமாற்ற கரோனா தொற்று பரவும் பயம் காரணமாக சென்னையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டது. கடற்கரைக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. பார்கள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டம் அனைத்து 10 மணிக்கே முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இரவு 11 மணி முதல் காலை வரை ஊரடங்கு அமலானது. ஆனாலும் இதையும் மீறி சென்னையில் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் காயமும் அடைந்துள்ளனர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரும் அடக்கம்.

திருமங்கலம் வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

சென்னை பாடி மதியழகன் நகரை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (48). இவரது மகன் முகமது இப்ராஹீம்(22). வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ ஆர்கிடெக்ட் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடத்திற்காக தனது நண்பர் கௌதம் (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் சென்றுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடித்துவிட்டு, அதிகாலையில் தனது நண்பருடன் புல்லட் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

திருமங்கலம் 13-வது அவென்யூ அருகே வந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்த பேருந்து திடீரென இடது புறமாக திருபியதில் இடதுபக்கத்தில் புல்லட் மோதியதில் தலையில் காயமடைந்த ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த நண்பர் கவுதம் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலானாய்வு போலீஸார் ஜாகீர் உசேன் உடலைக்கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பேருந்து திடீரென இடதுபுறமாக திருப்பியதில் இடதுபக்க சக்கரத்தில் மோதி கீழே விழுந்த ஜாகீர் உசேன் தலையில் ஹெல்மட் அணியாததால் காயம் பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

அலட்சியமாக வாகனத்தை இயக்கு மாணவர் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(40) என்பவரை கைது செய்தனர். அவர்மீது ஐபிசி 304(A) (விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல்), 279 (அலட்சியமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் வாகனத்தை இயக்குதல்), 337 (காயம் ஏற்பட காரணமாக அமைதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேப்போன்று சென்னை புழல் பைபாஸ் சாலை பூந்தமல்லி அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துள்ளானது. பூமாதேவன்(34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கார்த்திக் படுகாயமடைந்தார் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி, ஈசிஆர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்துகளில் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கும. லேசான காயம் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x