Published : 01 Jan 2021 12:24 PM
Last Updated : 01 Jan 2021 12:24 PM

ஜன.4-ல் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு: அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் முதற்கட்ட மருத்துவக்கலந்தாய்வு நிறைவுப்பெற்ற நிலையில் 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் ஜன.4-ம் தேதி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. முதல் நாளில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்கள், 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கியது. இடையில் நிவர் புயல் காரணமாக ஒரு வாரம் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பின்னர் டிசம்பர் மாதம் கலந்தாய்வு தொடர்ந்தது கடந்த டிச.10-ந் தேதியுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்றது. அதைத் தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 11-ந் தேதி தொடங்கி கடந்த டிச.24-ந் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. இந்திய தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்கு திரும்ப அளிக்கப்பட்டது. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

ஜனவரி 5-ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ மறு கலந்தாய்வும் நடைபெறுகிறது. ஒரு நாளில் 2 கட்டங்களாக நடக்கும் இந்த கலந்தாய்வு 11-ம் தேதி வரை நடக்கிறது. முதல் மூன்று நாட்கள் பொது கலந்தாய்வும், பின்னர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மற்ற ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

பொதுக்கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் சேராமல் விட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசு வழங்கிய இடங்களில் மாணவர்கள் சேராமல் மீதமுள்ள இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தது அந்த இடங்களுக்கும் சேர்த்து இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x