Published : 31 Dec 2020 07:47 PM
Last Updated : 31 Dec 2020 07:47 PM
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக இருந்த மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மீனாகுமாரியின் பதவிக்காலம், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது.
அதன்பின், ஆணைய உறுப்பினராக இருந்த நீதிபதி துரை. ஜெயச்சந்திரன், பொறுப்புத் தலைவராகக் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையச் சட்டப்படி, முதல்வர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு, மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்க வேண்டும்.
இது சம்பந்தமாக விவாதிக்க கடந்த வாரம் நடந்த கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். தகுதியானவரை இப்பதவியில் நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை, மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆணையத் தலைவராக பாஸ்கரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதிய மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் குறித்த குறிப்பு:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 1956-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி எஸ்.பாஸ்கரன் பிறந்தார். இவரது பெற்றோர் வி.சாமியப்பா, எஸ்.பர்வதம். தந்தை சாமியப்பா, மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
எஸ்.பாஸ்கரன் 1988-ம் ஆண்டு சிவில் நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு, 2001-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இவர், நீதிபதிகள் சங்கத்தின் பொருளாளர், செயலாளர், தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறைப் பதிவாளராக இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2016 அக்டோபர் 5-ம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2018 நவம்பர் 16-ம் தேதி ஓய்வுபெற்றார். தற்போது பதவி ஏற்றுள்ள அவர் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT