Published : 31 Dec 2020 07:04 PM
Last Updated : 31 Dec 2020 07:04 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கதிரறுக்கும் இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகளே கதிரறுத்து வருகின்றனர். மேலும் களம் இல்லாததால் சாலையில் கதிரடித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2.10 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நடப்பு பருவத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்பார்த்த மழையை விட கூடுதலாக பெய்துள்ளது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருகின்றன.
மழைநீர் சூழாத இடங்களில் தற்போது அறுவடை பணி தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் கதிரறுப்பது, அடிப்பது போன்ற பணிகளை ஆட்களே செய்து வந்தனர். இதனால் கிராமங்கள்தோறும் கதிரடிக்கும் களம் இருந்தது.
தற்போது வைக்கோல், நெல் மணிகளை தனித்தனியாக பிரித்து கொடுப்பதாலும், ஆட்கள் கூலியை விட வாடகை குறைவு என்பதாலும் கதிரறுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் களம் என்ற அமைப்பே பல இடங்களில் காணாமல்போய் விட்டது. ஆண்டுதோறும் அறுவடை காலங்களில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு இயந்திரங்கள் வரும்.
இந்தாண்டு தமிழகம் முழுவதும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு குறைந்தளவே இயந்திரங்கள் வந்துள்ளன. மானாமதுரை அருகே சின்னக்கண்ணனூர், சோமாத்தூர், புலிக்குளம், மானம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அறுவடை பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகளே கதிரறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் களம் இல்லாததால் ஆபத்தான முறையில் சாலைகளில் கதிரடித்து வருகின்றனர்.
இதுகுறித்து சோமாத்தூர் விவசாயிகள் கூறியதாவது: அறுவடை பணியை ஆட்கள் மூலம் செய்தால் கதிரறுத்தல், கதிரடித்தல், கதிரை பிரித்தெடுத்தல் போன்ற பணிகளுக்கு கூடுதல் செலவாகும். அதனால் இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்தாண்டு இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மணிக்கு ரூ.2,700 முதல் ரூ.3 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். அப்படியே வரச்சொன்னாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் காத்திருந்தால் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும். அதனால் நாங்களே அறுவடை செய்கிறோம், என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT