Published : 31 Dec 2020 06:14 PM
Last Updated : 31 Dec 2020 06:14 PM
கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் 50-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் (டிசம்பர் 31) முடிவடைந்தது.
ஏ.பி.சாஹி ஓய்வுபெறுவதைக் கருத்தில் கொண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சஞ்ஜிப் பானர்ஜி - சில குறிப்புகள்:
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தபின் 1990-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தொழில் செய்து சிவில், நிறுவனச் சட்டங்கள், சமரசத் தீர்வு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராகத் திகழ்ந்தார்.
2006-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT