Published : 31 Dec 2020 05:55 PM
Last Updated : 31 Dec 2020 05:55 PM
சிவகங்கையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ‘பேச்சுவார்த்தைக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்,’ என பெரியாறு பாசன விவசாயிகள் அறிவித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு முறையாக தண்ணீர் திறக்காததால் பெரும்பாலான பெரியாறு பாசன கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.
பெரியாறு பாசன நீர் திறக்காததை கண்டித்து ஜன.7-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதையடுத்து டிச.26-ம் தேதியில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் அறிவித்தப்படி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர்.
இதையடுத்து இன்று சிவகங்கையில் கோட்டாட்சியர் முத்துகழுவன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் ‘பேச்சுவார்த்தைக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்,’ என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கூட்டத்திற்கு பிறகு ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், அன்வர், அய்யனார் கூறுகையில், ‘‘ முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வர வேண்டும். அவர் எங்களுக்குரிய உரிமையை எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி ஜன.7-ம் தேதி போராட்டம் நடத்துவோம்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து விவசாய பிரதிநிதிகளை அழைத்துள்ளோம், என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT