Published : 31 Dec 2020 05:48 PM
Last Updated : 31 Dec 2020 05:48 PM
ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு கிரண்பேடிக்கு எதிராக மீண்டும் வரும் 8-ம் தேதி (ஜனவரி) முதல் முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். கூட்டணிக் கட்சியினரும் இதில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும், உடனடியாக 39 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 2019 பிப்ரவரியில் ராஜ்நிவாஸ் முன்பு சாலையில் தர்ணா போராட்டத்தை நடத்தினார். ஆறு நாட்கள் இப்போராட்டம் நீடித்தது. இதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. முக்கியமாக தர்ணா போராட்டத்தில், ரேஷனில் இலவச அரிசி தருவது, பத்தாயிரம் அரசு சார்பு ஊழியர்களின் ஊதியத்துக்கு அனுமதி, பஞ்சாலைகளைத் தொடர்ந்து இயக்குவது ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது வரை இக்கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
தமிழகத்தில் பல பணிகள் நடக்கையில் சிறிய மாநிலமான புதுச்சேரியில் திட்டங்கள் ஏதும் நடக்கவில்லை. இதில் துணைநிலை ஆளுநர் மீதும், ஆளும் அரசின் மீதும் மக்கள் கோபத்துடன் உள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள சூழலில் அடுத்தகட்ட நகர்வை காங்கிரஸ் எடுத்துள்ளது.
புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (டிச. 31) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் ஜனவரி 8-ம் தேதி முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மீண்டும் தொடர் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். ராஜ்நிவாஸ் முன்பு இப்போராட்டம் முன்பு நடந்ததுபோல் நடக்கும். மாநில வளர்ச்சிக்குத் தொடர்ந்து கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரைக் கண்டித்து இப்போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்போம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்கும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT