Published : 31 Dec 2020 05:12 PM
Last Updated : 31 Dec 2020 05:12 PM
அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும். கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்கின்றன என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ஜனவரி 3, 4 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 18 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதல் நாள் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். இந்த இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் முதல்வரின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை அவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 4-ம் தேதி மாலை 4 மணிக்கு கருங்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
கருங்குளத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நடைபெறும் மண்டபத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து முதல்வர் சுவாமி தரிசனம் செய்யவுள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் கோயில், மீனவர்களுடான சந்திப்பு நடைபெறும் வீரபாண்டியன்பட்டினம் தனியார் திருமண மண்டபம், பனைத் தொழிலாளருடனான சந்திப்பு நடைபெறும் அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் பள்ளி வளாகம், தூத்துக்குடியில் முதல்வர் வழிபடவுள்ள தூய பனிமய மாதா பேராலய வளாகம், முதல்வர் தங்கவுள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2016 தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
வாக்குறுதி அளிக்காக நகரும் நியாயவிலைக் கடை, மினி கிளினிக், மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, குடிமராமத்து என எண்ணற்ற திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
எனவே, 2021 தேர்தலிலும் மக்களின் அன்பை பெற்று அதிமுக ஆட்சி தொடரும் நிலையே உள்ளது. தமிழக மக்களும் அதே மனநிலையில் தான் உள்ளனர். நாங்கள் 210 தொகுதிகளில் வெல்வோம். கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்கின்றன. 234 தொகுதி என்பது எங்கள் இலட்சியம். நிச்சயம் வெற்றி பெறுவோம். தூத்துக்குடி வரும் முதல்வருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் என்றார் அமைச்சர்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்:
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், முதல்வர் பங்கேற்கும் நிகழ்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தனியார் ஹோட்டல் அரங்கில் வைத்து இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT