Published : 31 Dec 2020 05:12 PM
Last Updated : 31 Dec 2020 05:12 PM

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில் உச்சவரம்பின்றி பங்கேற்க அனுமதி: ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்ன?- முழு விவரம்

சென்னை

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இனி சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு பணியாளர் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக அளிக்கப்பட்ட தளர்வுகள் தவிர, வேறு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம், பாதுகாப்பு நடைமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளைப் பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது''.

இவ்வாறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x