Published : 31 Dec 2020 03:29 PM
Last Updated : 31 Dec 2020 03:29 PM
புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், பாஸ்போர்ட் மற்றும் வேலைவாய்ப்புக்காக காவல்துறை சார்பில் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது என, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் இன்று (டிச.31) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டக் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகள், மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து வரும் வணிகர்கள் கூட்டத்தைக் கூட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறினால் உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத இடங்களில் வெளியே சுற்றித் திரிவதும், பெண்களைக் கேலி, கிண்டல் செய்தல், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வது உள்ளிட்ட முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனங்களை இயக்குவது தெரியவந்தால் அவர்களது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்துகொள்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
வழக்குப் பதிவு செய்யப்படும் நபர்கள் வெளிநாடுகள் செல்லவும், வேலைவாய்ப்பு பெற காவல் துறை சார்பில் வழங்கப்படும் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது என்பதால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT