Published : 31 Dec 2020 03:22 PM
Last Updated : 31 Dec 2020 03:22 PM
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டில் விற்பனையாகின. அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.4000, கனகாம்பரம் ரூ.2000 க்கும் விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சுற்றுப்புற கிராமப்பகுதி மற்றும் நிலக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பல்வேறு வகையான பூ சாகுபடி நடைபெற்றுவருகிறது.
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பூக்களை திண்டுக்கல், நிலக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்களில் விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்களுக்கு அருகிலுள்ள மதுரை, தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.
இதனால் பூ க்களுக்கு என்றென்றும் கிராக்கி உள்ளது.
விசேஷ நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பதும், விளைச்சல் அதிகரித்தால் பூக்களின் விலை குறைவதுமாக பூக்களின் விலை இருந்துவருகிறது.
தற்போது பனிக்காலம் என்பதால் ஈரப்பதம் அதிகம் காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகிவருகிறது.
இதனால் பூக்கள் சேதமடைந்து விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாதநில ஏற்படுகிறது. பூக்கள் பாதிப்பு காரணமாக குறைவான பூக்களே மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது.
ஆனால் மார்கழி மாதத்திற்கு கோயில்களுக்கு பூக்கள் தேவை அதிகம் இருப்பதாலும், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷங்களாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது.
அதிகபட்சமாக மல்லிகை பூ விலை ஒரு கிலோ திண்டுக்கல் மார்க்கெட்டில் ரூ.4000 வரை விற்பனையானது. நிலக்கோட்டை மார்க்கெட்டில் ரூ.3800 வரை விற்பனையானது. கனகாம்பரம் ஒரு கிலோ ரூ2000 க்கு விற்பனையானது. ஜாதிப்பூ ரூ.1000,
காக்கரட்டான் ரூ.800, பன்னீர்ரோஸ் ரூ.160 செவ்வந்தி, சம்பங்கி ரூ.170, அரளி ரூ.170 என விற்பனையானது. கோழிக்கொண்டை, கனகாம்பரம் பூக்கள் ஒரு கிலோ ரூ.50 க்கு விற்னையானது.
இதுகுறித்து நிலக்கோட்டை பூ வியாபாரி மகேந்திரன் கூறியதாவது: பனிப்பொழிவு அதிகம் காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகிவிடுகின்றன. இதனால் பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விசேஷங்கள் அடுத்தடுத்து இருப்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்து பொங்கல் விழா வருவதால் பூக்கள் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT