Published : 31 Dec 2020 03:16 PM
Last Updated : 31 Dec 2020 03:16 PM

மெரினா தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீடு; சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்த 900 தள்ளுவண்டிக் கடைகளை அமைக்கும் விவகாரத்தில், மாநகராட்சியின் நடவடிக்கை பழைய வியாபாரிகளைப் பாதிக்கும் என முறைப்படுத்தக் கோரிய வழக்கில், சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 900 தள்ளுவண்டிக் கடைகளை அமைக்கவும், கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த 900 தள்ளுவண்டிக் கடைகளில் 60 சதவீதக் கடைகள், ஏற்கெனவே மெரினாவில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கும், மீதமுள்ள 40 சதவீதக் கடைகளை விருப்பப்படும் மற்றவர்களுக்கு ஒதுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மெரினாவில் தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 10-ம் தேதி சென்னை மாநகராட்சி அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைப்புசாரா மற்றும் கட்டுமர மீன்பிடித் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தெரு வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி, முறையான கணக்கெடுப்புகளை நடத்தாமல், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளதாக மாநகராட்சி மீது மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளதால், 35 ஆண்டுகளாக மெரினாவில் வியாபாரம் செய்து வரும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x