Published : 31 Dec 2020 11:26 AM
Last Updated : 31 Dec 2020 11:26 AM

ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டம்; பிரதமர் மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு: கோப்புப்படம்

சென்னை

ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டி.ஆர்.பாலு இன்று (டிச. 31) வெளியிட்ட அறிக்கை:

"ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன், 'இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்' என்று இலங்கை அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

'ராஜபக்ச சகோதரர்கள்' புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-வது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப்படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கை சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ, ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம், அதுவும் 13-வது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அப்படியொரு முடிவு, 'இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்' என்றும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x