Published : 30 Dec 2020 08:03 PM
Last Updated : 30 Dec 2020 08:03 PM
விருதுநகரில் சிறப்புப் பார்வையாளரிடம் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று புகார் அளித்தனர்.
சிறப்பு வாக்காளர் சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சிறுதொழில் முதலீட்டு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநரும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பார்வையாளர் சிஜிதாமஸ் வைத்யன் வாக்காளர் சுருக்க திருத்தம் பணிகள் மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 1881 வாக்குச் சாவடிகள் உள்ளன. சில வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அந்த இடங்களில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக சுமார் 500 முதல் 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றார்.
ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் பேசுகையில், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மேட்டுப்பட்டி மக்கள் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜீவாநகர் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. அதுபோல், ஜீவாநகரில் உள்ள வாக்காளர்கள் சிலர் மேட்டுப்பட்டியில் வாக்களிக்கும் நிலை உள்ளது.
இதை மாற்ற வேண்டும். இதேபோன்று பஞ்சம்பட்டியில் உள்ள வாக்காளர்கள் 7 கி.மீட்டர் தூரம் சென்று இளந்திரையானில் வாக்களிக்கும் நிலையையும் மாற்றி அந்தந்த பகுதியிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் கூறுகையில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 255 பாகங்களில் 150 பாகங்களில் ஆய்வு செய்ததில் சுமார் 3,500பேர் இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை.
அத்தோடு, புதிய வாக்காளர்களாக பதிவு செய்தோர் ஏற்கெனவே இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுபோன்று பலரது பெயர்கள் இருமுறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.
மேலும், எந்தெந்த பகுதிகளில் இருமுறை வாக்காளர் பெயர் இடம்பெற்றுள்ளது என்ற ஆவணத்தையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு பார்வையாளரிடம் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பார்வையாளர் சிஜிதாமஸ் வைத்யன் கூறுகையில், கரோனா காலத்தில் நடத்தப்படும் இத்தேர்தலில் முன்னேற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு இருந்தால்தான் தேர்தலை சிறப்பாக நடத்த முடியும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT