Published : 30 Dec 2020 06:20 PM
Last Updated : 30 Dec 2020 06:20 PM

10 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செயல்பாட்டுக்கு வந்தவை 82.4%; 9.4% அல்ல: தரவுகளுடன் தமிழக அரசு விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 சதவீதம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச.30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 சதவீதம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

உண்மையில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவிகிதமாகும். கடந்த 10 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 309 புதிய தொழில் திட்டங்கள் தமது புதிய உற்பத்தியைத் தொடங்குவதற்கான 'இயங்குவதற்கான இசைவு ஆணையை' தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பெற்றுள்ளன.

கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 1,164 புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையின் மொத்த மதிப்புக் கூட்டல் ஆண்டுக்கு சராசரியாக 12.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக தேசிய சராசரியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியைத் தொடர்ந்து பெற்று, இந்தியாவில் தொழில்துறையின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

நாளிதழ் ஒன்றில் வரப்பெற்ற இச்செய்தியானது மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இணையதளத்திலுள்ள தொழில் முனைவோர் கருத்துருக்களின் (Industrial Enterpreneur Memorandum) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில் முனைவோர் கருத்துரு இணையதளத்தில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு நோக்கத்தினை முதலில் பதிவேற்றி விட்டு, பிறகு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் திட்டத்தின் நிலையைப் பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் அனைத்து முதலீட்டாளர்களும் பதிவு செய்வதை உறுதி செய்ய எவ்வித அமைப்போ, கட்டாயமோ இல்லை.

ஆதலால், ஒரு சில முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த IEM இணையதளத்தில் பதிவு செய்கிறார்கள். உண்மையில், முதலீடே செய்யாதவர்கள் கூட, இதில் பதிவு செய்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதில் பதிவு செய்யப்பட்ட முதலீடுகளைப் பற்றிய செய்திகள் சரியானவைதானா என்று உறுதி செய்ய, எந்த விதமான முறைகளும் இல்லை. ஆகவே, இந்தத் தரவுகளை மட்டும் வைத்து மேலோட்டமாக வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வும், ஒரு மாநிலத்தின் உண்மையான முதலீட்டுச் சூழலைப் பிரதிபலிக்காது.

புரிந்துணர்வு ஒப்பந்தத் திட்டங்களைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில், அகில இந்திய அளவில், தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 72 சதவீதத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 89 சதவீதத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தத் திட்டங்களில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய திட்டங்கள் மற்றும் நிலம் வாங்கப்பட்டது, அனுமதிகளுக்காக விண்ணப்பித்தது, சோதனை உற்பத்தி தொடக்கம் ஆகிய நிலைகளில் உள்ள திட்டங்களை மட்டும் கணக்கில் எடுத்து இந்த சதவிகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்:

2011-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை, ரூபாய் 5 லட்சத்து 97 ஆயிரத்து 753 கோடி அளவுக்கு முதலீடுகளுக்கான உத்தரவாதம் அளித்த 500 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. மேற்படி திட்டங்களில், 412 தொழில் திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன அல்லது பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு, 82.4 சதவிகிதம் என்ற சிறப்பான அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் அமைந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைச் சுட்டிக்காட்ட, அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, மேலும் பல்வேறு குறியீடுகளும் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டல், சராசரியாக ஆண்டுக்கு 12.7 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. 2011-12-ம் ஆண்டு முதலே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளுக்கு வழங்கிடும் 'இயக்குவதற்கான இசைவு' சீரான நிலையில் வளர்ச்சி பெற்று வருகின்றது.

2011-12-ம் ஆண்டு முதல் இன்று வரை, 26 ஆயிரத்து 309 திட்டங்களுக்கு 'இயக்குவதற்கான இசைவு' வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் தொழில் திட்டங்களுக்குத்தான் 'இயக்குவதற்கான இசைவு' தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரங்கள்:

இதுபோலவே, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் 1,164 புதிய உயர் மின் அழுத்த இணைப்புகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தரவுகள் அனைத்தும் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்கின்றன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x