Last Updated : 30 Dec, 2020 05:55 PM

 

Published : 30 Dec 2020 05:55 PM
Last Updated : 30 Dec 2020 05:55 PM

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை பணிகள் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பெ.கீதாஜீவன் உள்ளிட்டோர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனைப் பணிகள் இன்று தொடங்கின. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனைப் பணிகள் இன்று தொடங்கின. இதற்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர் குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பு அறை திறக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்தப் பணிக்கு வரும் பணியாளர்கள் மற்றும் கண்காணிக்க வரும் அரசியல் கட்சி பிரமுகர்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே உள்ள அனுப்ப வேண்டும். செல்போன்களை உள்ளே கொண்டு வர அனுமதிக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளே வரும் அனைவரும் முகக்கவசம் மற்றும் சாணிடைசர் பயன்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆட்சியர் கி.செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை மகராஷ்டிராவில் இருந்து வந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நடைபெற்ற ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை காப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பு அறையை திறந்து ஒவ்வொரு இயந்திரங்களும் முதல்கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது.

பெல் நிறுவன பொறியாளர்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவற்றை பரிசோதனை செய்கின்றனர்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இப்பணிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் வெப் கேமிரா மூலம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இங்கு நடைபெறும் பணிகள் அனைத்தும் நேரடியாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,603 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தற்போது 2,795 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,368 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3036 வாக்குசசீட்டு இயந்திரங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களைவிட 140 சதவிதம் அதிகமான கட்டுபாட்டு இயந்திரம், 170 சதவிதம் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் என்ற அடிப்படையில் இருப்பு வைத்துள்ளோம்.

ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரத்தையும் பெல் நிறுவன பொறியாளர்கள் பரிசோதனை செய்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து சரியாக உள்ளதா என பரிசோதனை செய்து, அனைவரின் முன்பும் சீல் செய்து கையொப்பமிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

அவை அனைத்தையும் காப்பு அறையில் இருப்பு வைக்கப்படும். முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் இஎம்எஸ் மென்பொருளில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதுபோல் பரிசோதனை செய்து சரியாக உள்ள இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் ரகு, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த், வசந்தி, பெல் நிறுவன பொறியாளர்கள் அமித்கோசல், ரவிந்தர்சிங், ஹெர்மங்குபி மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்தானம், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x