Last Updated : 30 Dec, 2020 05:27 PM

 

Published : 30 Dec 2020 05:27 PM
Last Updated : 30 Dec 2020 05:27 PM

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி; வெளிமாநிலங்களில் இருந்து யாரும் வராதீர்: கிரண்பேடி கருத்தால் சர்ச்சை

புதுச்சேரியில் கடற்கரை செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புகள். | படம்: எம்.சாம்ராஜ்.

புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும். இது அரசு முடிவு என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து யாரும் வராதீர்கள். கரோனா பரவலின் ஒரு பகுதியாகி விடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடத்துவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் முதல்வர் நாராயணசாமி கண்டிப்பாக கொண்டாட்டம் உண்டு எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட சூழலில் சர்ச்சை அதிகரித்தது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி இன்று (டிச.30) கூறியதாவது:

"புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உண்டா? இல்லையா? எனப் புதுவை மக்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் குழப்பமான சூழல் உள்ளது. புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும். இது அரசு முடிவு.

நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புதுவை பிரெஞ்சு கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. புதுவைக்குத் தனித்தன்மை உண்டு. அனைத்துக்கும் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதுவை சுற்றுலாவை நம்பியுள்ள மாநிலம். சுற்றுலா வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும், வருவாய் கிடைக்கும்.

அதேநேரத்தில், மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்து புத்தாண்டு கொண்டாடப்படும். பேரிடர் தடுப்பு ஆணையத்தின் தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற முறையிலும் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

புதுச்சேரி அடுத்துள்ள ஆரோவில் கடற்கரையில் வெளிமாநில சுற்றுலாவாசிகள். | படம்: எம்.சாம்ராஜ்

பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டத்தால் நகரப் பகுதியில் உள்ள மக்களுக்குச் சில சங்கடங்கள் இருக்கும். அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வேண்டும். கடந்த 10 மாதங்களாக மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்துள்ளோம்.

இதனால் புதுவையில் கரோனா 98 சதவீதம் குறைந்துள்ளது. 97 சதவீத மக்கள் இன்றும் முகக்கவசம் அணிந்துதான் வெளியே நடமாடுகின்றனர். மக்கள் மீது அரசுக்கு மிகுந்த அக்கறை உண்டு. கடந்த 10 மாதங்களாக ஆளுநர் மாளிகையின் முதல் தளத்தில் அமர்ந்துவிட்டு, தற்போது மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல கிரண்பேடி காட்டிக் கொள்கின்றார்.

அதிகாரிகளை மிரட்டி தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கிறார். புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை".

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அவர் பேட்டி முடிந்த பிறகு வாட்ஸ் அப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த தகவல்:

"புத்தாண்டைக் குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கரோனா பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர். அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு யாரும் வரவேண்டாம். கரோனா பரவலின் ஒரு பகுதியாக வேண்டாம். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை, மாநிலங்களை எச்சரித்துள்ளது".

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புத்தாண்டு விஷயத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் புதுச்சேரி வந்துள்ளனர். அத்துடன் நகரப் பகுதிகளில் கடற்கரை செல்லும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் இம்முறை கடும் கட்டுப்பாடுகள் நிலவ வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x