Published : 30 Dec 2020 05:22 PM
Last Updated : 30 Dec 2020 05:22 PM
திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகமாக இருக்கிறது. உள்ளே புகைந்து கொண்டிருக்கிறது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை மந்தவெளியில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிச.30) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவுக்குச் சாதகமா? பாதகமா?
உடல்நலம் கருதி அவர் அரசியலுக்கு வரவில்லை எனச் சொல்லியிருக்கிறார். அதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆண்டவன் அவருக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அவர் கட்சி ஆரம்பித்திருந்தால் கருத்து சொல்லலாம். ஆரம்பிக்காதபோது கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
அதிமுகவைப் பொறுத்தவரையில் எங்களுக்குண்டான வாக்குகள் எப்போதும் பிரியாது. எவ்வளவோ சோதனைகளைத் தாண்டி எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள், இரட்டை இலைக்குத்தான் இப்போதும் வாக்களிக்கும். கிட்டத்தட்ட 7 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சியை நிறுவியுள்ளோம். எங்களுக்குத் தமிழக மக்கள் சாதகமாக இருக்கின்றனர்.
ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்குத்தான் பாதிப்பு எனக் கூறப்பட்ட நிலையில், திமுக இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுமா?
திமுகவுக்குப் பெரும் பாதிப்பு இந்தத் தேர்தலில் இருக்கும். அதிமுக உடைந்துவிடும் என ஸ்டாலின் சொல்கிறார். இது என்ன மண்சட்டியா? அதிமுக இரும்பாலான எஃகு கோட்டை. யாரும் இதை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இரட்டை இலை இமயமலை போன்று இன்றைக்கும் காட்சி தருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை உடைக்கப் பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை. அதிமுகவை உடைக்கவோ, சின்னத்தை முடக்கவோ முடியாது.
திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகமாக இருக்கிறது. உள்ளே புகைந்து கொண்டிருக்கிறது. மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு திமுகவில் என்ன மரியாதை இருக்கிறது? பாட்டன், முப்பாட்டன், தாத்தா, பேரன் என வாரிசுகள்தான் திமுகவில் தலைவராக வர முடியும்.
எங்கள் கட்சியில் அப்படியில்லை. கொடி பிடிக்கும் தொண்டன்கூட முதல்வராக வர முடியும் என்பதற்கு அதிமுகதான் சாட்சி. முதல்வர் பழனிசாமி சாதாரணத் தொண்டராகத் தொடங்கியவர்தான்.
நான் என்ன டாடா பிர்லாவா? மிட்டா மிராசுதாரரா? சாதாரணமான காசிமேட்டில் பிறந்தவன் நான். கொடி பிடிக்கும் தொண்டனாக இருந்துதான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். சாதாரணத் தொண்டனுக்குத்தான் அதிமுகவில் மரியாதை. திமுகவில் வாரிசுக்குத்தான் மரியாதை.
உதயநிதிக்குக் கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி, தற்போதைய தலைவர் படம் மட்டும் பேனர்களில் வைக்க வேண்டும் என, ஸ்டாலின் உத்தரவிடுகிறார். இது உதயநிதிக்குப் பொருந்தாதா? அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. துரைமுருகன், பொன்முடி, கனிமொழி படங்களைப் போடக்கூடாதா? இது முழுக்க முழுக்க கனிமொழிக்கு வைத்த 'செக்'. எங்கு கட்சியைப் பிடித்துகொள்ளப் போகிறாரோ என இப்போதே கனிமொழியை மட்டம் தட்டுகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் ரூ.2,500 அறிவித்துள்ளார். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஸ்டாலின் முயல்கிறார். திட்டங்களைத் தடுக்க ஸ்டாலின் இடையூறு செய்கிறார். அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறோம்.
அதிமுகவிலும் மற்றவர்களுக்கு மரியாதை இல்லை என்ற விமர்சனம் உள்ளதே?
கிளைச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என அனைவருக்கும் உரிய மரியாதை அதிமுகவில் தரப்படுகிறது. கட்சிக்கு உழைப்பவர்கள், விசுவாசமாக இருப்பவர்கள் நல்ல பதவிக்கு வரலாம். திமுகவில் அப்படியில்லை. திமுகவில் மாவட்டச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள்தான் இருக்கின்றனர். அவர்கள் சொல்பவர்கள்தான் வட்ட, கிளை, பகுதி, நகரச் செயலாளர்களாக உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் கஷ்டப்படுபவர்களுக்குத்தான் வாய்ப்பளித்து அழகு பார்த்தது அதிமுக. எங்கள் கட்சியைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு என்ன? அவர் அவருடைய கட்சியைப் பார்த்தால் போதும். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. அதிமுக அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின், மக்களின் எண்ணம்.
பொங்கல் பரிசு டோக்கனில் அமைச்சர்கள் படம் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதே?
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கட்சியின் சின்னத்தைப் போட்டுக் கொடுத்தது திமுக. அதுபோல் நாங்கள் கொடுக்கவில்லை. நாங்கள் கொடுப்பதில் இரட்டை இலை இல்லை. நாங்கள் மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால், அவர்கள் மலிவான அரசியல் செய்துள்ளனர். அமைச்சர் பெயர் போடுவதில் தவறில்லை. அமைச்சர் என்றால் அரசின் அங்கம்தான். அதில் தவறு இல்லை. முதல்வரும், சட்டப்பேரவை உறுப்பினரும் அரசின் பிரதிநிதிதான். சின்னங்கள் போடுவது விதிமீறல். பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களிடையே நன்றாகச் சென்றடைந்ததால் வயிற்றெரிச்சல். இதனை நிறுத்த இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.
சசிகலா சிறையிலிருந்து வந்தால், அமமுக - அதிமுக இணையுமா?
என்றைக்கும் ஒரே நிலைதான். சசிகலா சிறையில் இருந்து வந்தாலும், அவருடன் அதிமுக இணையாது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT