Published : 30 Dec 2020 04:29 PM
Last Updated : 30 Dec 2020 04:29 PM

உருமாறிய கரோனா; அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

உருமாற்றம் பெற்ற கரோனா பரவும் சூழலில் அனைத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 27-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கரோனா பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளது.

மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் இன்று (டிச. 30) விசாரணைக்கு வந்தபோது, இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும், பிரிட்டனில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஐந்தாவது நாள் கரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x