Published : 30 Dec 2020 02:30 PM
Last Updated : 30 Dec 2020 02:30 PM
ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முசிறி தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் அருகேயுள்ள வாணப்பட்டறை மைதானத்தில் இன்று (டிச. 30) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கினர். அவர்கள் இருவரும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். இதனால்தான் அவர்கள் இருவரின் புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் உருவாக்கிய வழியிலேயே அதிமுக இன்றும் செயல்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்.
அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதை அவரால் மறுக்க முடியுமா? ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைந்த அதிமுக ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதிமுக ஆட்சியைக் கலைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. மக்களின் துணையுடன் 3 ஆண்டுகள் 10 மாதங்களைக் கடந்து அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எனவே, இப்போது திட்டமிட்டு அதிமுகவை உடைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அதிமுக வலிமையான இயக்கம். அதிமுகவை எந்தக் காலத்திலும் உடைக்க முடியாது. ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுப் பார்க்க முடியாது.
திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆனால், இன்று நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கைப் பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கடந்த தேர்தலில் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகதான். தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கபினி அணை கருணாநிதி ஆட்சியில்தான் கட்டப்பட்டது.
ஆனால், விவசாயிகளைப் பாதுகாக்க குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக நிகழாண்டு 32.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுடன், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கத் திட்டமிட்டு, 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
எனவே, அதிமுக அரசின் நலத் திட்டங்கள் தொடர 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT