Published : 30 Dec 2020 01:58 PM
Last Updated : 30 Dec 2020 01:58 PM
தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர்கள் அசுதேஷ் அக்னிஹோத்ரி தலைமையில் வந்த 8 பேர் கொண்ட மத்தியக் குழுவினர், தஞ்சை மாவட்டத்துக்கு இன்று (டிச.30) வந்தனர்.
மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தில் மழையின்போது கண்ணன் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால், சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, மாவட்டத்தில் புயலால் நெல், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட 21 ஆயிரத்து 576 ஏக்கரில் பயிர்களும், 11 ஆயிரத்து 65 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் காரணமாக மாவட்டத்தில் சாலைகள் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை மத்தியக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் விளக்கி எடுத்துக் கூறினார்.
மத்தியக் குழுவினருக்கு விவசாயிகள் எளிதில் புரியும்படி இந்தியில் பேசி மழையால் பாதிக்கப்பட்டதை உணர்வோடு எடுத்துக் கூறினர். அதனைக் கேட்டுக் கொண்ட மத்தியக் குழுவினர் இந்தியில் தமிழக விவசாயிகள் பேசியதைப் பார்த்து வியப்படைந்தனர்.
ஆய்வின்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT