Published : 30 Dec 2020 12:16 PM
Last Updated : 30 Dec 2020 12:16 PM
தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (டிச.30) மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதம்:
"மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். குறைவான பயணிகள் வருகை இருந்ததால் ரத்து செய்கிறோம் எனக் காரணம் கூறியுள்ளது தெற்கு ரயில்வே. இது ஏற்கக்கூடிய வாதமல்ல. சேவைத்துறையான ரயில்வே இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்கி லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஏற்கக்கூடியது அல்ல.
இது கொள்ளைநோய் காலம். மக்கள் கூட்டமாகச் செல்வது தவிர்க்க வேண்டிய ஒன்று. இந்தச் சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொள்ளைநோய் காலத்தில் ஏற்புடையது அல்ல. அதுவும் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணம் கோவிட் சார்ந்த அச்சங்களை அதிகம் கொண்டது.
அப்படி இருந்தும் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்கு மேல் பயணிகள் வருகை இருப்பதாக அறிகிறோம் .
பயணிகளின் வருகைக் குறைவுக்கு காரணம் இரண்டு. ஒன்று கொள்ளை நோய் காரணமாக மக்கள் பயணிக்க அஞ்சும் காலம். மிகவும் தேவையான பயணங்களை மட்டும் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்து வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த வருகை அவசியமான மக்களைக் கொண்டதாக மட்டுமே உள்ளது. அப்படி இருக்க தேஜஸ் ரயில்களை ரத்து செய்வது அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு விரோதமானது. அரசு இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்குவது லாபத்தை நோக்கமாகக் கொள்வது ஏற்புடையதல்ல.
இந்த வண்டிகளில் குறைந்த பயணிகள் வருவதற்கு இன்னொரு காரணம் கட்டுப்படியாகாத கட்டணமாகும். இதே தடத்தில் ஓடக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட இதன் கட்டணம் 35% அதிகமாகும். (குளிர்சாதனப் பெட்டி இருக்கைக் கட்டணம் வைகை ரூ.685, தேஜஸ் ரூ.920)
இந்த உயர்வு ஏற்புடையது அல்ல. மூன்றில் ஒரு பாகம் உயர்வு என்பது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, கொள்ளைநோய் காலத்தில் மக்கள் வருமானம் குறைந்துள்ளது. இதைக் கணக்கில் எடுத்து சீசன் காலத்தில் கட்டணத்தைக் குறைப்பது போல இப்போது கட்டணத்தை நியாயமான அளவுக்கு வைப்பது வரவேற்கத்தக்கது. பயணிகளை ஈர்க்க வல்லது.
தனியார் வண்டிகளை அனுமதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனியார் வண்டிகள் லாபம் இல்லை என்றால் ரத்து செய்வார்கள். எனவே, தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பது நாங்கள் சொல்லும் காரணமாகும். இப்போது தனியாரைப் போலவே லாப நோக்கோடு ரயிலை ரத்து செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்கள் நலனுக்கு விரோதமானது.
இதைத்தான் பிரிட்டிஷ் தனியார் ரயில்வே செய்கிறது. அதனால்தான் தனியார் ரயிலை நாங்கள் எதிர்க்கிறோம் .தேஜஸ் எக்ஸ்பிரஸைப் போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது. டெல்லிக்கும் லக்னோவுக்கும், மும்பைக்கும் அகமதாபாதுக்கும் இடையே ஓடிவந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அவற்றுக்கும் இதே காரணம் கூறப்பட்டுள்ளது. இது தனியார் மயமானால் என்ன ஆகும் என்பதற்கு முன் அறிவிப்பாகும்.
கொள்ளைநோய் காலத்தில் அவசரக் காரணங்களுக்குப் பயணம் செய்யும் சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்வதைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போல கோவை, பெங்களூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இதே காரணத்துக்காக பயணிகள் ரயிலைத் தனியாருக்கு விடுவதைக் கைவிட வேண்டும் எனக் கோருகிறேன்".
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT