Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM
புதுச்சேரி இளையோர் வேலைவாய்ப் புக்காக வெளி மாநிலங்களையே நம்பியுள்ள சூழல் உள்ளது. அரசு பணியில் சேர்க்கையே நடப்பதில்லை.
இதற்கிடையே காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னிசிஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டு, பலவித காரணங்களால் காவல் துறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதை நடத்தக்கோரி பலதரப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் உடற்தகுதித் தேர்வுகள் தொடங்க இருந்தன. அச்சூழலில் அதில் உடற்தகுதித் தேர்வு முறையில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
“தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மூலம் மின்னணு சாதன பட்டை அணிவித்து கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு, ஓட்டத் தேர்வுகள் நடத்தாமல் உடற்தகுதித் தேர்வுகள் மனித கண்காணிப்பில் விசில் முறையில் நடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன.
அதனால், இத்தேர்வை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்’‘ என தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த அக்டோபரில் உத்தர விட்டார்.
அதைத் தொடர்ந்து, ‘கணினி மூலம் கண்காணிக்கப்படும் வகையில் உடற்தகுதித் தேர்வு நடத்துவதற்கான தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்றும் கிரண்பேடி அறிவித்தார். அறிவிப்பு வந்து இரண்டு மாதங்களாக போகிறது.
காவல்துறை உயர் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, "உடற்தகுதித் தேர்வு டிசம்பர் 27-ம் தேதி நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மின்னணு சாதன பட்டை அணிவித்து கணினி மூலம் கண்காணித்து ஓட்டத்தேர்வுகள் நடத்த தனியார் மென்பொருள் நிறுவனங்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேலும் காலதாமதமாகிறது. இவ்விஷயம் ஆளுநர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் போலீஸ் தேர்வு நடத்த இயலாது. புதுச்சேரி காவல் துறையில் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ளன" என்று குறிப்பிடுகின்றனர்.
இதுபற்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள தகவலில் " மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க காலி பணியிடங்களை நிரப்ப கால அவகாசம் நிர்ணயிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
“எப்போது தேர்வு வரும் என்று ஏங்கி நிற்கிறோம். நடப்புத் தேவைகளுக்காக வேறு வேலைகளுக்கும் சென்று வருகிறோம். எங்களக்கு வேலை கிடைக்காதது வருத்தம்; அதை விட வருத்தம் எடுத்த பயிற்சி வீணாகிறது“ என்கின்றனர் இந்த காவல் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்.
புதுச்சேரியின் காவல்துறைக்கு முதல்வர் பொறுப்பு வகிக்கிறார்; யூனியன் பிரதேசமாக இருப்பதால் இறுதி முடிவு ஆளுநர் கையில் உள்ளது. ‘கடந்த நான்கரை ஆண்டுகளில் இப்படியான பல நிர்வாக குளறுபடிகள் புதுச்சேரியில் தொடர்கிறது. அதில் காவல் துறை பணித் தேர்வும் ஒன்று’ என்கின்றனர் புதுச்சேரி மக்கள். இச்சிக்கல் சரியாகி, விரைவில் காவல்துறை பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT