Published : 29 Dec 2020 08:47 PM
Last Updated : 29 Dec 2020 08:47 PM
உருமாற்ற கரோனா வைரஸ் பரவுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
''மீண்டும் கரோனா பரவுகிறது என்ற அச்சம் தலைதூக்கி வருகிறது. புது வைரஸ் வேறு மாதிரியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், மக்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மார்ச் மாதம் அலட்சியமாக இருந்ததைப் போல, தமிழக அரசு இப்போது அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். 'கரோனாவா அது தமிழகத்தில் யாருக்கும் வராது' என்று அலட்சியமாக தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் இருந்ததால்தான் தமிழகம் இவ்வளவு பாதிப்பைச் சந்தித்தது.
இதுவரை எட்டு லட்சம் பேர் பாதிக்கப்படுள்ளார்கள். 12 ஆயிரம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்குத் தமிழக அரசின் அலட்சியம்தானே காரணம். இங்கிலாந்தில் இப்படி ஒரு புது வகையான வைரஸ் பரவுகிறது என்பதை அறிந்து தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்ததா என்றால் இல்லை! இங்கிலாந்தில் இருந்து வந்த 800 பேருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக தமிழக அரசு தேடி வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அப்படியானால் விமான நிலையங்களில் எந்தப் பரிசோதனையும் செய்வது இல்லையா? நிறுத்திவிட்டீர்களா? 'யாரும் அச்சப்படத் தேவையில்லை' என்று முதல்வர் சொல்கிறாரே தவிர, தடுப்புப் பணிகளை அரசு செய்ததாகத் தெரியவில்லை.
கரோனா கட்டுப்பாடு என்று சொல்லி கொள்ளையடிக்கிறார்களே தவிர, கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ரூபாய் 7,544 கோடியைச் செலவு செய்துள்ளதாகக் கடந்த 28ஆம் தேதி சொல்லி இருக்கிறார்கள். என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்? அது சம்பந்தமான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
கரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட அரசை உடன்பிறப்புகளின் பலத்தால் உழைப்பால் வெல்வோம்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT