Published : 29 Jun 2014 11:33 AM
Last Updated : 29 Jun 2014 11:33 AM

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஓராண்டில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் தகவல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஒரு ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை பொது மேலாளர் நீதிராகவன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில், சனிக்கிழமை நாணயங்கள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் திருவிழா திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த விழாவில், கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் கலந்துகொண்டன. இந்த முகாமில், வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டு தங்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வழங்கி, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டனர். ஒரு நபருக்கு அதிகப்படியாக ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி கனரா வங்கி துணை பொது மேலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சென்னை இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் நீதிராகவன் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் `தி இந்து' விடம் கூறியதாவது: ’’வெளிநாடுகளைப்போல், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வரும்.

முதலில், வெவ்வெறு காலநிலையில் உள்ள 6 முக்கிய இடங்களில் இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். அந்த இடங்களில் மக்களுடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன் பாடுகளைப் பார்த்து, மற்ற இடங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் நடைமுறைப் படுத்தப்படும்.

சாதாரண ரூபாய் நோட்டுகளை 2 ஆண்டுகள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்குள் கிழிந்துவிடும். ஆனால், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். சாதாரண நோட்டுகளில் நிறங்கள் அழியாது. சீக்கிரம் கிழியத்தான் வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் கிழியாது. ஆனால், அவற்றின் நிறம் மறைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சில்லறைத் தட்டுப்பாட்டுக்கு பொது மக்கள்தான் காரணம். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடி. ஆனால், கடந்த ஆண்டு 40 கோடி அளவுக்கு 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விடப்பட்டன.

இந்த ஆண்டு 73 கோடி அளவுக்கு நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

பொதுமக்கள், நாணயங்களை வெளியே கொண்டு வராமல் வீடுகளிலேயே தேக்கி வைத்துள்ளதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் மிகவும் குறைவு. 1 மில்லியன் ரூபாய் நோட்டுகளுக்கு 00.7 சதவீதம்தான் கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரத்தில் கூறப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x