Published : 29 Dec 2020 05:57 PM
Last Updated : 29 Dec 2020 05:57 PM

தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்: திருப்பித் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் எனப் பறிமுதல் செய்யப்பட்டதை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில் திருப்பி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்கா, ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணபிள்ளை என்பவரது தோட்டத்தில், வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுப்பதற்கு வைத்திருந்ததாக 6 லட்சத்து 78 ஆயிரத்து 10 ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு மரங்கள் விற்றதன் மூலம் கிடைத்த பணம் இது எனக் கூறி, அதைத் திருப்பித் தரக் கோரி கண்ணபிள்ளை தாக்கல் செய்த மனுவை வானூர் முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனது பணத்தைத் திருப்பித் தரக் கோரி அளித்த மனுவைப் பரிசீலிக்கவில்லை என்பதால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தரக் கோரி கண்ணபிள்ளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், விவசாயி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழங்க மறுக்க முடியாது எனக் கூறி, நான்கு வாரங்களில் பணத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டு அளித்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் தங்கள் கடமையைத் தவறக் கூடாது என வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x