Published : 29 Dec 2020 04:53 PM
Last Updated : 29 Dec 2020 04:53 PM
மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் மூலம் கோவை அரசூரில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக கேரளாவில் கொச்சி, தமிழகத்தில் கோவை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 18 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கோவை அரசூரில் 14.60 ஏக்கரில் தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவையில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குநர் (பொறுப்பு) ஆர்.விஜயகுமார் கூறியதாவது:
"புதிய தொழில்நுட்ப மையத்துக்கான நிலத்தை, எம்எஸ்எம்இ அமைச்சகத்திடம் மாநில அரசு ஒப்படைத்ததும் பணிகள் தொடங்கப்படும். விரைவாக மையத்தைத் தொடங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்ப மையத்தில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் மேம்பாட்டுக்காக அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த முடியாத நவீன இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவை மட்டுமல்லாது சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் இந்த வசதியை தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பவுண்டரிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஜவுளித்துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த மையம் பயன் அளிக்கும். மேலும், இன்ஜினீயரிங் கல்லுாரி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் இது உதவும்.
புதிய தொழில்நுட்ப மையத்தில் அமைக்க வேண்டிய இயந்திரங்கள், வசதிகளின் தேவை குறித்து தொழில் அமைப்புகளின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலித்து வசதிகள் ஏற்படுத்தப்படும்".
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT