Published : 29 Dec 2020 04:03 PM
Last Updated : 29 Dec 2020 04:03 PM
சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளார்.
சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.
அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.
2019-2020-ம் கல்வியாண்டில் மயிலாடுதுறையில் உள்ள கடையில் தமிழக அரசின் இலவச புத்தகங்கள் 1500 இருந்ததாக சொல்கின்றனர். அது எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதை காவல்துறை மூலம் அறிந்து, யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.
ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT