Published : 29 Dec 2020 02:21 PM
Last Updated : 29 Dec 2020 02:21 PM
ரஜினி மூலமாக திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுகவின் வெற்றியைத் தடுக்கலாம் என முயற்சி எடுத்தவர்களுக்கு அவரின் முடிவு ஏமாற்றம் அளிக்கும். திமுகவுக்கு இதில் எந்தக் கருத்தும் இல்லை என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் டிச.31 அன்று கட்சி குறித்து அறிவிப்பதாக இருந்த நிலையில், கரோனா சூழல், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுகவின் நிலைப்பாடு என்ன என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
“யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலுக்கு வரலாம். அது அவர்களது உரிமை. பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக கட்டாயம் வரும். திமுகதான் வந்துவிடும் என்கிற செய்தி அனைத்துத் தளங்களிலும், அனைத்து ஒற்றர்களும், அனைத்து மக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுகவை விட்டுவிடக்கூடாது, எப்படியாவது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று திராவிட இயக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள் எடுத்த முயற்சி அது.
பெருமுயற்சி எடுத்து ரஜினியை எப்படியாவது கொண்டுவந்து அவர் மூலமாக திராவிட இயக்கத்தைத் தோல்வி அடையச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அவர்கள்தான் தோற்றிருக்கிறார்கள். அரசியலுக்கு வந்திருந்தாலும் சரி, அவர் வரவில்லை என்று இப்போது அறிவித்த முடிவானாலும் சரி, எங்களுக்கு எந்தவிதமான ஏமாற்றமுமில்லை. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஒரு சாரர் அவருக்கென்று உள்ள ஒரு கூட்டம். திமுக, அதிமுகவை விரும்பாதவர்கள் அவர் பின்னால் போயிருப்பார்கள். அவர்கள் வேறு வேறு ஆட்களை எப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து இதை ஒவ்வொரு ஆண்டும் புது முயற்சியாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த முயற்சி இப்போது இல்லாமல் போயுள்ளது. அவ்வளவுதான்.
அதிமுகவுக்கு வேண்டுமானால் ரஜினியின் முடிவு சாதக பாதகமாக இருக்கலாம். அவர்கள் எண்ணம் எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், திமுகவைப் பொறுத்தவரையில் மக்கள் தமிழ்நாட்டில் உறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். அதைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவினர், ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள், குருமூர்த்தி போன்றவர்கள் நேரடியாக ரஜினியைச் சந்திப்பது எனத் தொடர்ச்சியாக அந்தப் பணியைச் செய்து பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
நீங்கள் தொடர்ச்சியாகப் பார்த்தால் நான்குமுனைப் போட்டி வந்தபோதுதான் எம்ஜிஆர் 130 இடங்களைப் பிடித்தார். மும்முனைப் போட்டி என்று பார்த்தால் திமுகவுக்கு அது சாதகமாகத்தான் இருந்துள்ளது. ஆகவே, ரஜினி இல்லாவிட்டால் என்ன, கமல்ஹாசன் இப்போது கிளம்பியுள்ளார், சீமான் கிளம்பியுள்ளார். எங்களுக்கு ஓட்டுப் போட விரும்பாதவர்கள் அவர்களுக்குப் போடப்போகிறார்கள். எது நடந்தாலும் அது திமுகவின் வெற்றியைப் பாதிக்காது.
திமுகவுக்கு நல்ல வாய்ப்புள்ளது. அவர் வந்திருந்தாலும் எங்களுக்குப் பாதிப்பு இருந்திருக்காது. வரவில்லை என்றாலும் பாதிப்பில்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு”.
இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT