Published : 28 Dec 2020 09:43 PM
Last Updated : 28 Dec 2020 09:43 PM
தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் பழனிசாமி நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (28-ம் தேதி ) கோவைக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
''தமிழகம் முழுவதும் நாளை முதல் அதிமுகவின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன். ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது, நிறைய பாலங்களை கட்டிக் கொடுத்து, பல்வேறு திட்டங்களை சென்னையில் கொண்டு வந்துள்ளார். முதல்வருக்கு சென்னையில் எதுவும் தெரியாது,’’ என அறிக்கை மூலம் திமுக முன்னாள் மேயரான மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் இறுதியில் திமுகவினர் அவசர கதியில் போரூர் பாலத்துக்கு அடிக்கல் நாட்டினர். பாலத்துக்குத் தேவையான இடத்தைக் கையகப்படுத்தவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்று, போரூர் பாலத்துக்குத் தேவையான இடத்தைக் கையகப்படுத்தி, வழக்குகளை எதிர்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தைக் கையகப்படுத்திய பின்னரே, போரூர் பாலத்தைத் தொடங்கி முடித்தோம்.
சென்னையில் பல பாலங்களை அதிமுக ஆட்சியில் கட்டியுள்ளோம். திமுக ஆட்சிக் காலத்தில் எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எங்களது ஆட்சிக்காலத்தில் சென்னையில் 86 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 15 பாலங்கள் கட்டும் பணி சென்னையில் நடந்து வருகிறது.
எனது தேர்தல் பிரச்சார உரைக்கு, பதில் தரும் வகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாங்கள் ஊழல்வாதிகள் எனக் குறிப்பிட்டு பொய் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் திமுகவினர்தான். தனது சொத்து விவரங்களை வெளியிட துரைமுருகன் தயாரா? பிரம்மாண்டமாக அவர் கல்லூரி கட்டியுள்ளார்.
அந்தக் கல்லூரியின் சுவரில் தட்டினால் ஊழல் ஊழல் எனக் குரல் வரும். அவர் எங்களைப் பற்றிப் பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, கோடி கோடியாகப் பணத்தை வாக்காளர்களுக்கு அளித்து, அதன் மூலம் வெற்றி பெறலாம் என எண்ணி, அவர்கள் பதுக்கிய பணத்தைத் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையின் மூலம் கண்டுபிடித்தது. அது தொடர்பான வழக்கும் தற்போது நடந்து வருகிறது. இதை மறைத்து பணப் பட்டுவாடா குற்றச்சாட்டில் சிக்கிய துரைமுருகன் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுகிறார்.
ஊழலின் ஊற்றுக்கண் திமுக
எம்ஜிஆர்தான் அவருக்கு ஆரம்பக் காலத்தில் உதவி செய்ததாக அடிக்கடி கூறி வரும் துரைமுருகன், அப்படியிருந்த தனக்கு தற்போது எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பாரா? ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியது திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்டதுதான் திமுக ஆட்சி.
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, சிட்கோவில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் கையகப்படுத்தி, அனுமதியில்லாமல், மனைவியின் பெயரில் வீடு கட்டி, வரித்தொகை செலுத்தியது தொடர்பான வழக்கும் தற்போது நடந்து வருகிறது. அவர் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மகளிர் காவல் நிலையம் என்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதைப் பின்பற்றி நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களைத் தடுக்க, வரதட்சணைக் கொடுமை உயிரிழப்பு, தவறான கண்ணோட்டத்தில் பெண்களின் ஆடைகளை அகற்றுதல் , பெண்களைத் தவறான உள்நோக்கத்துக்காக பின்தொடர்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்த சிறுமிகளை கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க 110 விதியின் கீழ் அறிவித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர், 2ஜி அலைக்கற்றை ஊழல் செய்தார். அந்த வழக்கை சிபிஐ தற்போது மேல் முறையீடு செய்து, விசாரணை நடந்து வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற விசித்திரமான நிபந்தனையை அவர்கள் நடைமுறைப்படுத்தி டெண்டர் கொடுத்தனர். லெட்டர் பேடு நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்தனர். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் நியாயமான முறையில் இ-டெண்டர் நடத்துகிறோம். இதில் யார் வேண்டுமானலும் பங்கேற்கலாம். இதில் தகுதியானர்களைத் தேர்வு செய்கிறோம். இதை ஊழல் என திமுகவினர் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
அரசியலில் கமல் ஜீரோ
அதிமுக ஆட்சியில் ஊழல் உள்ளது என்று ஆளுநரைச் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் மனு அளித்தது வேடிக்கையான ஒன்று. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இந்த ஆட்சியைக் கலைக்க பல்வேறு திட்டங்களைத் திமுகவினர் கையாண்டும், இந்த ஆட்சி நிலைத்தது. இதனால் திமுகவினருக்கு எரிச்சல் தாங்கவில்லை.
70 வயது வரை நடித்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமலுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும். நான் 46 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவன். அவர் நடிப்பில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், அரசியலில் ஜீரோ. எங்களது கூட்டணி தொடர்ந்து உள்ளது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளனர். இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லையே.
புதிய வகை கரோனா வைரஸ் தமிழகத்தில் இல்லை. சந்தேகத்துக்குரியவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை முழுமையாகத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவில் கருணாநிதி, அவருக்குப் பின்னர் ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின், பிறகு அவரது மகன் என வாரிசுகள் வருகின்றனர். திமுக கட்சியல்ல. அது கார்ப்பரேட் கம்பெனி. பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்தாலும், அவரது குடும்பத்தினர் மட்டும் வரிசையாக பொறுப்புக்கு வருவர். ஆனால், அதிமுகவில் தலைமைக்கும், மக்களுக்கும் உழைப்பவர்களுக்கு நிச்சயம் உயர்ந்த பதவி உண்டு. கூட்டணி ஆட்சி கிடையாது. கூட்டணி மந்திரி சபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது அதிமுகவின் நிலைப்பாடு. எங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வெளியிடப்படும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முன்னதாக, கோவை விமான நிலையத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமியை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியர் கு.ராசாமணி, மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT