Published : 28 Dec 2020 09:11 PM
Last Updated : 28 Dec 2020 09:11 PM
சசிகலா வெளியில் வரப் போகிறாரே, அவரோடு போய்விடலாமா? அல்லது முதல்வர் பழனிசாமியோடு இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் இரண்டு பேரும் அலைபாய்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். இப்படி தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அவர்களால் பொதுமக்களைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பேசியதாவது:
“அமைச்சர் ஓ.எஸ்.மணியனைத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருப்பவர்களுக்குத் தெரியாது. பொதுவாகவே ஒரு சில உளறுவாய் அமைச்சர்களைத் தவிர, வேறு யாரையும் பக்கத்து மாவட்டம் தாண்டித் தெரியாது.
அப்படி இந்த மாவட்டத்துக்குள் மட்டும் பதுங்கி வாழ்ந்து வந்த ஓ.எஸ்.மணியன் திடீரென்று தமிழகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல், மழை காலத்தில் மக்களைச் சந்திக்கப் பயந்து சுவர் ஏறிக் குதித்து ஓடிய காட்சியைத் தமிழ்நாடே பார்த்தது. அதில் இருந்து பிரபலம் ஆகிவிட்டார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறித்து இந்த மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு மந்திரி என்று அழைக்கிறார்கள். தனக்குச் சொந்தமான இறால் பண்ணை அமைப்பதற்காக அடப்பாறு முகத்துவாரத்தை அடைத்துவிட்டார் என்று பொதுமக்கள் சொல்வது அவருக்குத் தெரியுமா? இதனால் மற்றவர் விளைநிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இது அவருக்குத் தெரியுமா? தொடர் மழை பெய்தால் மழை நீர் வடிய வழியின்றி அப்பகுதி அவ்வப்போது ஏரி போல் காட்சி அளிப்பதாவது அவருக்குத் தெரியுமா?
தலைஞாயிறு பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மக்கள் சொல்லும் புகாருக்கு அமைச்சரின் பதில் என்ன? தலைஞாயிறு பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஏழை - எளிய மக்கள் பயன்படுத்தி வந்த ஓரடியம்புலம் சமுதாயக் கூடத்தை இடித்து அதை மாட்டுக் கொட்டகையாக மாற்றியதாகச் சொல்கிறார்களே. அதற்கு அவரது பதில் என்ன?
மருமகன் பெயரில் டெண்டர்கள் எடுத்து வருகிறார் என்று சொல்வது உண்மையா? வளப்பாறு பகுதியைச் சீரமைப்பதாகக் கூறி அங்கு வசித்து வந்தவர்களின் வீடுகளை இடித்து 2 கிலோ மீட்டர் தொலைவில் எவ்விதமான அடிப்படை வசதி இல்லாத இடத்துக்குத் தள்ளியதற்கு என்ன காரணம்? அமைச்சருக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதாலா?
தலைஞாயிறு ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்துவிடும் அவல நிலையில் இருக்கிறது என்கிறார்களே. இதில் நடந்த நிதி முறைகேடுகள் என்ன? நாகை மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் யார்? அமைச்சரின் பினாமிகளா? இதில் கொலை வரைக்கும் போனதே? அமைச்சரின் பதில் என்ன?
- இவை அனைத்தும் நாகை மக்கள் கேட்கும் கேள்விகள்தான்.
அவருக்குப் பணத்தைக் காட்டினால் மட்டும்தான் ‘ஓ யெஸ்’ என்பார். மற்றபடி ‘நோ’ மணியன்தான் என்று இந்த மாவட்டத்துக்காரர்களே சொல்கிறார்கள். இப்படி அமைச்சர் காமராஜாக இருந்தாலும், ஓ.எஸ்.மணியனாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த மாவட்டத்து மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தங்களைப் பற்றி மட்டும்தான் கவலை. தங்கள் பதவியைப் பற்றி மட்டும்தான் கவலை.
சசிகலா வெளியில் வரப் போகிறாரே, அவரோடு போய்விடலாமா? அல்லது முதல்வர் பழனிசாமியோடு இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் இரண்டு பேரும் அலைபாய்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். இப்படி தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அவர்களால் பொதுமக்களைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும்?”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT