Published : 28 Dec 2020 07:36 PM
Last Updated : 28 Dec 2020 07:36 PM
பின்னங்கால் செயல்படாத நிலையில் நடக்க முடியாமல் தவித்த நாய்க்கு ஊன்றுகோலாகச் சக்கர நாற்காலியைத் தயாரித்துக் கொடுத்த கோவையைச் சேர்ந்த தந்தை, மகளுக்கு, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வரும் பொறியாளரான காசிலிங்கம் மற்றும் ஐ.டி. ஊழியரான அவரின் மகள் காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து சில மாதங்களுக்கு முன் சீராப்பாளையம் பகுதியில் இருந்து நாய் ஒன்றைத் தத்தெடுத்தனர்.
'வீரா' என்று பெயரிட்டு வளர்த்த அந்த நான்கு வயது நாய்க்குப் பின்னங்கால்கள் செயல்படாத நிலையில் இருந்தன. இதற்காக பி.வி.சி. குழாயைப் பயன்படுத்தி, குழந்தைகள் விளையாடும் சைக்கிளின் சக்கரத்தைப் பயன்படுத்தி, ஒரு சக்கர நாற்காலியை வடிவமைத்து, கட்டிவிட்டனர். ஊன்றுகோலாக அதைப் பயன்படுத்தி அந்த நாய் மகிழ்ச்சியாக நடமாடி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் நேற்று 72-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “கோவையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் நடக்க முடியாமல் தவித்த தனது நாய்க்கு, தந்தையின் உதவியால் சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்துள்ளார். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் இந்நிகழ்வைச் சமூக ஊடகங்களில் நாம் காணலாம். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்” என்று பாராட்டினார்.
இதுகுறித்துக் காசிலிங்கம் மற்றும் காயத்ரி ஆகியோர் கூறும்போது, ''பின்னங்கால்கள் செயல்படாத நிலையில் காப்பகத்தில் இருந்து நாய்க்குட்டி வீராவை அழைத்து வந்தபோது, எங்களுக்கு பாரதியின் பாட்டுதான் நினைவுக்கு வந்தது. வீராவை நடக்க வைக்க நாங்கள், 'வீல் சேர்' வடிவமைத்தோம். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைப் பார்த்துதான் பிரதமர் பாராட்டியுள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பலரும் உயிர்களிடத்தில் அன்பு காட்டி, ஆதரவுடன் இருக்க இந்நிகழ்வு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT