Published : 28 Dec 2020 07:17 PM
Last Updated : 28 Dec 2020 07:17 PM
எம்ஜிஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர்தான் என்னை முதலில் கையில் எடுத்துத் தோளில் சுமந்தார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
''தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். ஏழ்மையை வைத்துதான், அவர்களிடம் வாக்குக்குக் காசு கொடுத்து வாங்க முடியும். ஏழ்மை நீங்கிவிட்டால், மக்கள் சுயமாக வாக்களிக்கத் தொடங்கி விடுவார்கள்.
எம்.ஜி.ஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர்தான் என்னை முதலில் கையில் எடுத்துத் தோளில் சுமந்தார். இதைப் பற்றிப் பேசுவோர் சரித்திரங்களையும், நிகழ்வுகளையும் பார்ப்பது கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் கலெக்ஷனுக்குச் சென்று விடுவார்கள்.
வெறும் அடுக்கு மொழிப் பேச்சு அல்ல, அலங்காரப் பேச்சல்ல, உங்களைக் கொஞ்ச நேரம் மகிழ்வித்துவிட்டு அடுத்த தேர்தலில் மட்டும் தலையைக் காட்டும் ஆட்கள் அல்ல நாங்கள்.
என்னுடன் அரசியலுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும், தங்களுக்கென்று ஒரு தொழில் உள்ளவர்கள். அப்படியிருக்கும்போது அவர்கள், அரசியலுக்கு வந்து சம்பாதிக்க மாட்டார்கள். உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற்றுத் தருவார்கள். இதற்கு நீங்களும் கைகோக்க வேண்டும். அப்படிக் கோத்தால் இந்தத் தேரை இழுத்து விடலாம்.
எங்கள் வேட்பாளர் வாக்குக் கேட்க வீடு தேடி வர மாட்டார்கள். குறைகளைக் கேட்க வருவார்கள். தொகுதியின் மக்கள் கூறும் குறைகளை ஊர்ப் பெரியவர்கள் மத்தியில் கேட்டு, அதற்குக் கால அவகாசம் பெற்று, அதை நிறைவேற்றப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்து நிறைவேற்றுவார்கள்.
மக்கள் குறைகளைச் சொல்லும் கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு நல்வழி என்பதை மக்களுக்குக் காட்டினோம். இப்போது மற்றவர்கள் அதைப் போட்டி போட்டுக்கொண்டு நடத்தி வருகிறார்கள். நாங்கள் பழிவாங்கும், பழிபோடும் அரசியலைச் செய்யமாட்டோம். நாங்கள் வழிகாட்டும் அரசியலைச் செய்ய வந்துள்ளோம்.
நமது உரிமைகளை வரமாகவும், தானமாகவும் பெற்று வருகிறோம். அந்த உரிமை உங்களிடமும் கிடைத்துவிட்டால் தமிழகம் சீரமைக்கப்பட்டு விடும். மக்களாகிய உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நேர்மை என்பது வரவேண்டும். நேர்மை என்பது ஒருவகையான கவசம்.
விளைநிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுக்கும். விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப மானியங்கள் வழங்க வேண்டும். அரசு நினைக்கும் மானியத்தை வழங்கக் கூடாது.
எம்ஜிஆர் தொடங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகம் முறைகேடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். சரஸ்வதி மஹால் நூலகம் மொத்தமாகக் களவுபோகும் முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு காலத்தில் சரித்திரத்தில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் இன்று திறந்தவெளிச் சாக்கடை ஓடும் நகரமாக உள்ளது. அதை மாற்றியே ஆகவேண்டும்''.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT