Published : 28 Dec 2020 02:04 PM
Last Updated : 28 Dec 2020 02:04 PM
விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சி அடையும். அது, நம்முடைய நாட்டில் நடைபெறக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, காஜாமலை தனியார் ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
''திருச்சியில் நாங்கள் பெரிய எழுச்சியைப் பார்த்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம், குறிப்பாக மகளிர் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பல தடைகள், அனுமதியின்மை ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் எங்களுக்கு நம்பிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.
தமிழக அரசியலில் நாங்கள் 3-வது அணியாக இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. மற்றபடி, 3-வது அணி குறித்து ஜனவரியில் சொல்கிறேன். 3-வது அணி அமைந்தால் கண்டிப்பாக நடிகர் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
அரசின் ஊழல் குறித்து நான் சொல்வதற்கு மாறாக முதல்வர் பேசியிருக்கலாம். ஆனால், மறுப்பாக இருக்க முடியாது. ஏனெனில் தற்காத்துக் கொள்வது அவரது பொறுப்பு.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் ரூ.300, ஆணாக இருந்தால் ரூ.500, பிறப்புச் சான்றிதழ் பெற பெண்ணுக்கு ரூ.200 ரூபாய், ஆணுக்கு ரூ.500, சாதிச் சான்றிதழ் பெற பெண்ணுக்கு ரூ.500, ஆணுக்கு ரூ.3,000, ஓட்டுநர் உரிமம் பெற பெண்ணுக்கு ரூ.1,000, ஆணுக்கு ரூ.5,000, பாஸ்போர்ட் பெற காவல்துறை சரிபார்ப்புக்கு ரூ.500, குடும்ப அட்டை பெற ரூ.1,000, இடம் பதிவு செய்ய ரூ.10,000, பட்டா பரிவர்த்தனைக்கு பெண்ணுக்கு ரூ.5,000, ஆணுக்கு ரூ.30,000, சொத்து வரிக்கு ரூ.5000, மும்முனை மின் இணைப்புப் பெற ரூ.15,000, தண்ணீர் இணைப்புக்கு ரூ.10,000, புதை சாக்கடை இணைப்புப் பெற ரூ.5,000, திட்ட அனுமதி பெற ரூ.5,000 முதல் ரூ.30,000, பரம்பரை வாரிசுச் சான்றிதழ் பெற ரூ.500, ஓய்வூதியம் அல்லது கணவரை இழந்த ஒய்வூதியம் பெற ரூ.500, பிணவறையில் ரூ.2,000, இறப்புச் சான்றிதழ் பெற ரூ.500 என லஞ்சம் கொடுக்க வேண்டும்.
தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சத்தில் தமிழகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான விலைப் பட்டியல்தான் இது. இதில், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி விலை. விலை வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால், யாரும் இதை மறுக்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
இரட்டை இலைக்கு ஊறு விளைவிப்பவர்கள், அதைப் பாதுகாப்பதாக நினைத்து சிதைக்கும் ஏற்பாடுகளைச் செய்பவர்கள் இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள்தான்.
மக்கள் நீதி மய்ய அரசு அமைந்தால், அரசே வீடுதோறும் கணினி வழங்கும். அது, இலவசம் அல்ல. அரசின் முதலீடு- மக்களின் உரிமை. ஒவ்வொரு மாவட்டத்தையும் தலைநகருக்கு இணையாக ஆக்குவதே எங்கள் திட்டம். அந்தந்தத் தொழில் சார்ந்த தலைநகராக்க மக்கள் நீதி மய்யத்தால் முடியும்.
காந்தி, எம்ஜிஆர் மட்டுமின்றித் தேவைப்படும் இடத்தில் கருணாநிதியையும் குறிப்பிடுவேன். சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை மக்கள் நீதி மய்யம் எதிர்க்கிறது. ஆனால், இட ஒதுக்கீடு என்பது தேவை. மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான். தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான். பாஜக மதவாதக் கட்சி இல்லை என்று சொல்லவே முடியாது.
விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது, நம்முடைய நாட்டில் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். பல லட்சம் விவசாயிகள் குளிரில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையே பார்க்க முடியாதவரை, என்னால் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை.
நியாயமாக டார்ச் லைட் சின்னம் எங்களுக்குத்தான் சேர வேண்டும். அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்''.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் முருகானந்தம், தலைமை நிலையப் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT