Published : 28 Dec 2020 11:32 AM
Last Updated : 28 Dec 2020 11:32 AM
புதிய அச்சுறுத்தலாக இங்கிலாந்தில் தோன்றியுள்ள உருமாற்ற கரோனா வைரஸ் குறித்தும், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது, தமிழகத்தில் எடுக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் முடங்கினர். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஷாப்பிங் மால்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்தில் திடீரென உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்துடனான விமான சேவையையும் நிறுத்தியுள்ளது. ஆனாலும், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளைக் கணக்கெடுத்துப் பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தெலங்கானாவுக்கு சமீபத்தில் வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களில் 184 பயணிகள் தவறான முகவரியை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்திலிருந்து இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழியாக தெலங்கானாவுக்கு வந்த 93 பயணிகள் முகவரியை ஆய்வு செய்தபோதிலும் அந்த முகவரியில் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்களின் தொலைபேசி எண்ணும் தவறாக இருந்தது.
இதுபோன்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகள் எடுத்துவருகின்றன.
உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கான தடுப்பு நடவடிக்கையாக, ஏற்கெனவே அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தலே போதும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சமீபகாலமாக பொதுமக்கள் இடையே முகக்கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கடுமையான அலட்சியம் இருந்து வருகிறது. சென்னை மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக விலகல் போன்றவற்றைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், பொது இடங்களில் பாதுகாப்பற்றுக் கூடுவதையும் தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பாக புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஐசியூவில் அல்ல என்று மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர், ஐசிஎம்ஆர் விஞ்ஞ்சானி பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார்.
Chennai citizens seem to have forgotten #COVID19. Crowds in malls without mask, crowded gatherings and and sense of complacency everywhere. Stay safe and follow #COVID19 appropriate behaviour to start 2021 in good health with family and not in the ICU !
— Prabhdeep Kaur (@kprabhdeep) December 21, 2020
தற்போது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த பயணிகளைக் கண்டறிந்து அவர்களைப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு மார்ச் மாதம் 19 பேர் கொண்ட மருத்துவ-தொற்று நோய் நிபுணர் கொண்ட குழுவை நியமித்து அதன் ஆலோசனைப்படி நடந்து வருகிறது.
மாதம்தோறும் கடைசி வாரத்தில் இக்குழுவுடன் ஆலோசனை நடத்தி அது அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள், நீட்டிப்பு உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் தலைமையில், உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதனின் ஆலோசனையைப் பெற்று தமிழக அரசு கரோனா தொற்றைத் தடுக்கும் முயற்சியை எடுத்துக் கட்டுப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கரோனா உருமாற்றம் அடைந்து வரும் சூழ்நிலையில், அதன் பாதிப்பைத் தடுக்கவும், ஊரடங்கில் தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவும் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
அடுத்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் ஊரடங்கை எவ்வகையில் நீட்டிப்பது என்பது குறித்து தமிழகம் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT