Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM
ஏகாம்பரநாதர் கோயில் அருகே நவீன வசதிகள் கொண்ட உணவகம்,கூட்ட அரங்க வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளன.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன், சித்ரகுப்தன், கயிலாசநாதர் மற்றும் சுரகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கோயில்கள் அமைந்துள்ளன. கோயில் நகரமாக விளங்கி வரும் இங்கு வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆன்மிக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
அதேசமயம், நகரில் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் நிர்வாகங்கள் சார்பில் விடுதிகள், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஓரிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, ஒலிமுகம்மது பேட்டை அருகே ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர்பரப்பளவு கொண்ட நிலத்தில், ரூ.24 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய வளர்ச்சிவங்கியின் நிதி உதவியின் மூலம்இவ்விடுதி கட்டப்படுகிறது. இங்கு,குளிர்சாதன வசதியுடன் கூடிய 34அறைகள், உணவகம், நவீன வசதியுடன் கூடிய கூட்ட அரங்கம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலாவாக பேருந்துகளில் வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கு வசதியாக 300 பேர் வரை தங்கும் வகையில் விடுதி வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளதால், வெளியூர் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுலா மற்றும்அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, "பக்தர்கள் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இங்கு மின்தூக்கி மற்றும் நவீன வசதிகளுடன் பல்வேறு விதமான அறைகள்,கழிப்பறைகள் அமைக்கபட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலாவாக வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, நகருக்கு வெளியே விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் அருகே150 பேருந்துகள் நிறுத்தும்வகையில் பிரசாத் திட்டத்தில் ரூ.5.41கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வை-ஃபை, சோலார் மின்விளக்குகள், கழிப்பறைகள், ஓட்டுநர்கள் தங்குமிடம் மற்றும் புராதன சிலைகள் மற்றும் வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், வரும் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என கருதுகிறாம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT