Published : 27 Dec 2020 07:00 PM
Last Updated : 27 Dec 2020 07:00 PM
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பொது சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் இந்தச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செல்வன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
''கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பொது சுகாதாரத் துறை களப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.
பதவி உயர்வில் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர்கள் 246 பேருக்கு சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.
பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை மருத்துவத் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்.
அவுட் சோர்சிங் அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் 2,000 பேரை நிரந்தரப் பணியாளர்களாக்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும், அனைத்துவிதப் பாதுகாப்பு உபகரணங்களையும் அந்தந்த மாவட்ட அலுவலகம் மூலம் தொய்வின்றி வழங்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் நிலை 2 ஆக 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவோருக்கு நிலை 1 பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களில் தொழுநோய் ஆய்வாளர்களாகப் பணியாற்றிய (தற்போது பொது சுகாதாரத் துறை சுகாதார ஆய்வாளர்கள்) காலத்தில், 50 சதவீதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பயன் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்''.
மாநிலம் முழுவதிலும் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் திரளானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT