Published : 27 Dec 2020 04:31 PM
Last Updated : 27 Dec 2020 04:31 PM

நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும்: அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பேச்சு

சென்னை

அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்கிற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஒப்புக்கொள்வதில் பாஜக தலைமை தயக்கம் காட்டி வருகிறது. முதலில் மாநிலத் தலைவர் எல்.முருகன் பதில் சொல்லாமல், பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறிவந்தார். இந்நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பதிலளிக்க மறுத்து மாநிலத் தலைவர் முருகன் கருத்தை ஆமோதிப்பதாகத் தெரிவித்தார்.

எல்.முருகன் ஏற்கெனவே அளித்திருந்த பேட்டியில், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இன்று அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். மூன்று தலைவர்கள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார்கள் எனச் சாடிய அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி, கூட்டணி எண்ணத்துடன் வருபவர்கள் சிந்தித்து வாருங்கள் எனப் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோர் அதிமுகவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று தெரிவித்தனர்.

அன்வர் ராஜா பேசியதாவது:

“அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம்தான் இன்று நடக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடக்கும்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை அறிவிக்கும் என்றால் அது எப்படி முடியும். அது அவர்களின் கட்சிக்குதான் அறிவிக்க முடியும். அதிமுகவுக்கு எப்படி அறிவிக்க முடியும். அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஏற்கெனவே முடிவு செய்து ஓபிஎஸ் அறிவித்துவிட்டார். அதிமுக தனித்து 6 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. 2016-ல் தனித்து நின்றே ஆட்சியைப் பிடித்தது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை முடிந்துவிட்டது. இதற்குமேல் கூட்டணி என்று வருகிறபோது, அதிமுக தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்கிற எங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு வருவார்களேயானால் அவர்களைச் சேர்த்துக்கொண்டு பயணிப்போம்”.

இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.

அதேபோன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இதே கருத்தைச் சொன்னார். “தமிழகத்தில் தலைமை என்பது அதிமுக தலைமைதான் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அதிமுக ஒன்றுதான் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரம்மாண்டமான பெரிய கட்சி. ஆகவே இந்தக் கூட்டணிக்கு தலைமை அதிமுகதான்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x