Published : 27 Dec 2020 02:24 PM
Last Updated : 27 Dec 2020 02:24 PM

மூன்று பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலை; கூட்டணி ஆட்சிக் கனவில் வரும் தேசியத் தலைவர்களின் எண்ணம் நிறைவேறாது: கே.பி.முனுசாமி ஆவேசப் பேச்சு

சென்னை

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி திராவிட இயக்கத்தை வீழ்த்தி அரசியல் செய்யலாம் என வரும் தேசியத் தலைவர்களின் எண்ணம் நிறைவேறாது. தேசியக் கட்சிகளானாலும் சரி, மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் ஆட்சி என கே.பி.முனுசாமி பேசினார்.

சென்னை ஒய்எம்சிஏவில் அதிமுக தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:

“2021 சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில், அரசியல் வரலாற்றில் மாற்றம் ஏற்படுமா என்றெல்லாம் அவர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் நீண்ட நெடியகாலமாகக் கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நம்மை வழிநடத்திச் சென்ற எம்ஜிஆர், ஜெயலலிதா இன்று இல்லை. அவர்களை எதிர்த்து அரசியல் நடத்திய கருணாநிதி இன்று இல்லை. அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாகப் போர்க்களத்தில் நின்ற இந்தத் தலைவர்கள் இன்று இல்லாத சூழ்நிலையில் இந்தத் தேர்தலில் எப்படியாவது நின்று வெற்றிபெற்று விடலாம் என்று பலவிதக் கணக்குகளைப் பலர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசியல் வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் மாறுபட்டவை. இது பெரியார் பிறந்த மண். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அடிமைகளாக நிலச்சுவன்தார்களிடமும், மேல் சாதியினரிடமும் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மேலெழுந்து கொண்டுவர பகுத்தறிவுக் கொள்கைகளைப் பெரியார் உருவாக்கினார்.

அந்தப் பெரியாரிடத்தில் பாடம் படித்தவர் அண்ணா. அண்ணா ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். பெரியார் பகுத்தறிவுக் கொள்கையை மட்டும் புகுத்துகிறார், அதைச் சட்டமாக்க வேண்டுமானால் நாம் அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல் களத்தில் நின்றார்.

அப்படித் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியின் அடித்தளம் எது என்று சொன்னால் தமிழ் மண், தமிழர் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழர் வீரம். அவற்றின் கலவையைக் கலந்து திமுக என்கிற அந்த மாபெரும் திராவிட இயக்கத்தை நட்டு வைத்தவர் அண்ணா. அண்ணாவின் கொள்கை, எம்ஜிஆரின் பிரச்சாரம் காரணமாக குறுகிய காலத்தில் 1967-ல் திமுக வெற்றி பெற்றது.

1967-ல் இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்த நேரம். திமுக வெற்றி பெற்ற பின்னர் கடந்த 50 ஆண்டுகாலமாக எந்த ஒரு தேசியக் கட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திராவிட இயக்கம்தான் இங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதை இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகிற சில அரசியல் கருங்காலிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணா மறைந்தார். அண்ணாவின் ஒரே வாரிசாக எம்ஜிஆர் இயக்கம் கண்டார். அவர் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் இயக்கத்தைக் காக்கின்ற விடிவெள்ளியாக ஜெயலலிதா வந்தார். கட்சியைக் காப்பாற்றினார். 91-லிருந்து 16 ஆண்டு காலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் பணியிலும், 16 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட பேரியக்கமாக மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா. அவர் மறைந்தார். அதற்குப் பின்தான் பிரச்சினை வந்தது.

இவர்கள் யாருக்கும் வாரிசு கிடையாது. அதன்பின் சில கசப்புகள் வந்தன. ஆனாலும் நாம் இயக்கத்தைக் காக்க ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றிணைந்தோம். அனைவரும் இணைந்து ஜனநாயக முறைப்படி இருபெரும் தலைவர்களாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் ஏற்றுக்கொண்டோம்.

திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தைச் சீரழித்துவிட்டது என்று சில கருங்காலிகள் சொல்கிறார்கள். சில தேசியக் கட்சிகள் சொல்கின்றன. சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். பெரியார் காலத்திலிருந்து இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்ட முயன்று வரும் கூட்டம், இந்தத் தலைவர்களை வீழ்த்தவேண்டும் என ஒரு சமூகம், ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கம் 50 ஆண்டுகாலம் தமிழகத்தை ஒழித்துக் கட்டிவிட்டது என்கிறது ஒரு கூட்டம். இந்தப் பிரச்சாரக் கூட்டம் மூலம் அந்த கருங்காலிக் கூட்டத்தை நான் கேட்கிறேன். அந்த தேசியக் கட்சிகளுக்கு நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளை இந்த அரசு பெற்றுள்ளது என்றால் இந்த ஆட்சி எவ்வளவு திறமைமிக்க ஆட்சியாக இருக்கவேண்டும்.

உணவு உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலம், மருத்துவத்தில் சாதனை செய்து கொண்டிருக்கிறது. உயர் கல்வியில் 49% உள்ள ஒரே மாநிலம் தமிழகம். 100 மாணவர்கள் பிளஸ் 2 முடிக்கும் போது 41% மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கிறார்கள். இன்று மருத்துவக்கல்லூரி, பொறியல் கல்லூரி, கலைக்கல்லூரி என்று சொன்னால் 50% கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

அதற்குக் காரணம் 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சி. திராவிட இயக்கத்திற்கு சொந்தக்காரர் கருணாநிதி அல்ல. அதன் சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. இப்போது அதற்குச் சொந்தக்காரர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும். ஜனநாயக முறைப்படி தலைவர்களைத் தேர்வு செய்கிறோம். ஆனால், திமுகவில் அப்படி இல்லை.

கருணாநிதி மறைவுக்குப் பின் துரைமுருகனோ, ஆற்காடு வீராசாமி போன்ற தலைவர்கள் ஏன் வர முடியவில்லை. தந்தை இறந்தபின் அந்தப் பதவியை அபகரித்துக்கொண்டவர் ஸ்டாலின். அதற்குப் பின் தனது மகனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

இப்படி வாரிசு அரசியலை வைத்துள்ள திமுக நம்மை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பில் நாம் முனைப்போடு இருக்கவேண்டும். பல்வேறு ஊடகங்கள் பலவற்றைச் சொன்னாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம் நல்ல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். மருத்துவம், கல்வி, அருகமைப் பள்ளிகள், கல்லூரி எனக் கல்வியில் புரட்சி செய்கிறோம்.

விவசாயத்தில் புரட்சி செய்கிறோம். வேளாண்மைச் சட்டங்களை பல மாநிலங்கள் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் முதல்வர் ஆதரவு தந்து விவசாயிகளை இந்த அரசு பாதுகாத்து, விவசாயிகளுக்கு உரிய விலையை அரசு தந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக உள்ளது என்று முதல்வர் அழகாகச் சொல்லியுள்ளார்.

இப்படி அனைத்து நிலைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளோம். தமிழகத்தை 50 ஆண்டுகாலம் வெற்றிகரமாக திராவிட இயக்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்யும் இயக்கம் அதிமுகவாகத்தான் இருக்கும். அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமை ஏற்போம். வெற்றி பெறுவோம்.

எந்த தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி. அதிமுக தலைமையில்தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு எந்தத் தேவையும் இல்லை. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எந்த தேசியக் கட்சியாவது, அரசியல் கட்சியாவது வந்தால் அக்கட்சியினர் சிந்தித்துக் கொள்ளுங்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. எங்களைப் பொறுத்தவரையில் அண்ணாவின் கொள்கை, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை, இங்குள்ள தலைவர்களின் கொள்கை, அதிமுகவின் கடைசித் தொண்டனின் கொள்கையும் அதுதான் என்று சொல்கிறேன்”.

இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x