Published : 27 Dec 2020 01:15 PM
Last Updated : 27 Dec 2020 01:15 PM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் பஞ்சாலை வாகனம் கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டதாகக் கூறி பிணவறைக்குக் கொண்டு சென்றதால் உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை அருகே செல்லையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 22 பஞ்சாலைத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பந்தல்குடி தனியார் பஞ்சாலைக்குச் சென்றுகொண்டிருந்த பஞ்சாலை வாகனம் திருச்சுழி பனையூரில் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
வாகனத்தில் பயணம் செய்த செல்லையாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (18) மற்றும் பூசையா (29) என்ற இரண்டு பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருச்சுழி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சுழி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருச்சுழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மற்றும் மதுரை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவரை இறந்துவிட்டதாகக் கூறி திருச்சுழி அரசு மருத்துவமனை பணியாளர்கள் பிணவறைக்குக் கொண்டுசென்றபோது அவர் திடீரென எழுந்து குடிக்கத் தண்ணீர் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பஞ்சாலை வாகன ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT