Published : 27 Dec 2020 12:41 PM
Last Updated : 27 Dec 2020 12:41 PM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உற்பத்தியாகும் பிஎஸ்எப்எல் புழுக்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தப் புழுக்களின் பயன்பாட்டால் உரம், தீவனச் செலவு பாதியாகக் குறைந்துள்ளது.
உரச் செலவு, தீவனப் பற்றாக் குறையால் விவசாயம், அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலை பலரும் கைவிட்டு வருகின்றனர். குறைந்த முதலீட்டில் உரச்செலவையும், தீவனப் பற்றாக்குறையையும் நீக்கி விவசாயத்தில் சாதிக்கலாம் என்கிறார் மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுந்தரேஷ்வரன்.
மாற்றுத்திறனாளியான இவர் அப் பகுதியில் 15 செண்ட் இடத்தில் மியாவாக்கி (குறுங்காடு) முறையில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைகளை வளர்த்து வருகிறார். அத்துடன் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் நாட்டுக்கோழி, கருங்கோழி, வாத்து, நாட்டு நாய்களையும் வளர்த்து வருகிறார். அவற்றுக்குத் தேவையான உரம், தீவனங்களை தனது பண்ணையிலேயே தயாரித்து கொடுக்கிறார். இதற்காக அவர் தனது பண்ணையில் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி ‘பிளாக் சோல்ஜர் பிளை லார்வா’ ( பிஎஸ்எப்எல்) என்ற புழுக்களை வளர்க்கிறார்.
இந்தப் புழுக்கள் பறவைகள், கால்நடை களுக்குத் தீவனமாகவும், புழுக்களின் கழிவுகள் பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. தங்கள் தேவைகளுக்குப் போக, மீதி புழுக்களை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.
இதுகுறித்து ஆய்வாளர் சுந்தரேஷ்வரன் கூறியதாவது: நான் புனேயில் தோட்டக்கலைத் துறையில் (ஹார்ட்டிகல்சர்) பட்டயப் படிப்பு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் 14 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன் அடிப்படையில் நவீன முறையில் விவசாயம் சார்ந்த சுயதொழில் தொடங்க முடிவெடுத்தேன்.
கால்நடை தீவனச் செலவு, விவசாய உரச் செலவைக் குறைப்பதற்காக, பல விவரங்களைச் சேகரித்தேன். அதன்பயனாக பிஎஸ்எப்எல் புழுக்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
பிஎஸ்எப்எல் ‘ஈ’க்கள் முட்டைகளை இட்டு, பொறிக்கும் இடத்தை ‘லவ் கேஜ்’ என்கிறோம். இதனை உள்ளூர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வடிவமைத்துள்ளேன். இதன்மூலம் அதிக முட்டைகளை ஆண்டு முழுவதும் பெறலாம். இதில் பிஎஸ்எப்எல் ‘ஈ’கள் இடும் முட்டைகளை பொறிக்க வைத்து, 5 நாட்கள் வரை புழுக்களாக வளர்க்க வேண்டும்.
பிறகு அந்தப் புழுக்களை மக்கும் குப்பைகளில் விட வேண்டும். அந்தப் புழுக்கள் குப்பைளை உண்டு 15 நாட்களில் 40 முதல் 45 சதவீதம் புரதமும், 30 முதல் 35 சதவீதம் கொழுப்பையும் பெறுகின்றன.
புழுக்களை நேரடியாக கோழி, கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கலாம். ஆனால், வெளியில் விற்பனை செய்ய மதிப்பு கூட்ட வேண்டும். நாங்கள் மாதத்துக்கு ஒன்று முதல் ஒன்றை டன் புழுக்களை உற்பத்தி செய்கிறோம். மெக்சிகோ, வளைகுடா நாடுகள், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். ஒரு கிராம் முட்டை தொகுப்பை ரூ.1,000 முதல், ரூ.1,500 வரை விற்பனை செய்கிறோம்.
இது மண் புழு உரத்தை விட அதிக ஊட்டச் சத்தை தாவரங்களுக்கு அளிக்கும். இதன்மூலம் 40 சதவீத உரச்செலவும் குறையும். தற்போது இந்தியாவிலும் இத்தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. இவை சோயாவை விட அதிக புரதச் சத்து கொண்டது. மேலும் குறைந்த இடத்தில், மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்.
பிஎஸ்எப்எல்-ல் இருந்து கைடின் என்ற மூலப்பொருள் கிடைக்கிறது. இவை மருந்துப் பொருட்கள், அழகு சாதனப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தப் புழுக்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் கூட புரதச்சத்து பொருளாகப் பயன்படக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT