Last Updated : 27 Dec, 2020 11:51 AM

 

Published : 27 Dec 2020 11:51 AM
Last Updated : 27 Dec 2020 11:51 AM

ரயில்வே மேம்பாலத்துக்கு அனுமதி கிடைக்காததால் திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்க பணியில் தொய்வு: 10 ஆண்டுகளை கடந்தும் தேனி மாவட்டத்தில் தீராத போக்குவரத்து நெரிசல்

தேனி அல்லிநகரத்தில் ஜல்லி பரப்பும் பணி நிறைவடையும் நிலையில் உள்ள சாலை விரிவாக்க பணி

தேனி

திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கப் பணிகள் மாவட்டத்தின் பல இடங்களிலும் நிறைவடைந்துள்ளது.இருப்பினும் தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே துறை இன்னும் அனுமதி வழங்காததால் இத்திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை தமிழகம்-கேரளாவை இணைக்கும் முக்கிய சாலை யாகும். தேனி மாவட்டத்தில் இவ்வழித்தடத்தில் பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட எந்த முக்கிய ஊர்களிலும் புறவழிச்சாலை இல்லாததால் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் அனைத்தும் ஊர்களுக்குள் செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் போக்குவரத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் இல்லாததால் விபத்துக்களும் அதிகரித்து வந்தது.

எனவே முதற்கட்டமாக இச்சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக 2010-ல் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி 133.7 கிமீ.தூரம் உள்ள இந்த சாலைப் பணிகள் ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் தொடங்கின.

திண்டுக்கல்-தேவதானப்பட்டி, தேவதானப் பட்டி-குமுளி என்று 2 கட்டங்களாக செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி, வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக தேவதானப்பட்டி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. தேவதானப்பட்டி, வத்தலக்குண்டுவில் புறவழிச்சாலை, மற்றும் சுங்கச்சாவடி கட்டுமானம் என்று அனைத்து பணிகளும் முடிந்தன.

தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் ரயில்வே அனுமதி கிடைக்காததால் மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது

ஆனால் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்டப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அதிகமான இடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டியிருந்தது. நிலம் கையகப்படுத்துதல், சேறு நிறைந்த விளைநிலம், நில உரிமையாளர்கள் போராட்டம், தொடர் மழையினால் நீர் தேங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலைப் பணிகளில் பெரும் தாமதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒப்பந்ததாரர் இப்பணியை விட்டுவிட்டுச் சென்று விட்டார். இதனால் பல ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் புதிய நிறுவனம் மூலம் 2019 முதல் இத்திட்டம் மீண்டும் வேகம் எடுத்தது. தேவதானப்பட்டியிலிருந்து லோயர் கேம்ப் வரை 90.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டது. புறவழிச்சாலையோடு சேர்த்து ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கின. ஆனால் இத்திட்டத்திற்குத் தேவை யான மண்ணை கண்மாய்களில் இருந்து அள்ள அனுமதி கிடைக்கவில்லை. எனவே மீண்டும் பணி தொய்வடைந்தது.

சின்னமனூர், உத்தமபாளையம் பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியவாறே கிடந்ததால் சாலை பணிக்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து கரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் உள்ளூர் பணியாளர் களுடன் பணி நடைபெற்றது. இதுபோன்று அடுத்தடுத்த பிரச்னைகளால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தேவதானப்பட்டி முதல் லோயர்கேம்ப் வரை 625 ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டப் பணியில் பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களிலும் இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல்-குமுளி சாலை 12 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. முக்கிய சந்திப்புகளில் இதன் அகலம் சற்று கூடும். இருவழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டு வருகிறது. நான்குவழிச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

எண்டப்புளி புதுப்பட்டி அருகே சில ஆக்கிர மிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்கான பணியும், வராகநதியின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும் நடை பெற்று வருகிறது. வாழையாத்துப்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க இதுவரை ரயில்வேத்துறை அனுமதி கிடைக்கவில்லை.

கரோனாவினால் பாதிக்கப்பட்ட பணி தற்போது மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சுமிபுரம், அல்லிநகரம், முத்துதேவன்பட்டி, கோடாங்கிபட்டி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளைம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் புறவழிச்சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. முக்கியச் சாலையுடன் இணைக்கும் பணிகள் விரைவில் துவங்கும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக குமுளி மலைச் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே குமுளி செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியே சென்று வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிகள் ஏறத்தாழ 80 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளது.

இருப்பினும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இன்னும் துவங்காததால் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தேனி மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே விரைவில் ரயில்வே துறை மேம்பாலத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x