Published : 27 Dec 2020 11:23 AM
Last Updated : 27 Dec 2020 11:23 AM
காரைக்குடி அருகே கதர் கிராமத் தொழில்கள் மையம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடிக் கிடக்கிறது. அவற்றை திறக்க அத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நன்கொடை
காரைக்குடி அருகே கண்டனூர், கோட்டையூர், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், கண்டனூரில் மாத்தூர் சாலையில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் நலவாரியம் சார்பில் 1986-ம் ஆண்டு தொழில் மையம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக தனக்கு சொந்தமான 26.26 ஏக்கர் நிலத்தை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். கதர் கிராமத் தொழில் மையத்தில் தச்சுத் தொழில், நூற்பு ஆலை, சோப்பு, காலணி தயாரிப்பு, நவீன தறி உள்ளிட்ட தொழில்கள் தொடங்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேலும் காகிதம் தயாரிக்க இயந்திரங்களும் நிறுவப்பட்டன. அதன்பிறகு இம்மையத்தில் தொழில்கள் தொடங்கப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் பயன்பாடின்றி இருந்தன. மேலும் பயன்பாடின்றி இருந்த காகித அலகு இயந்திரங்களும் விழுப்புரம் காகித ஆலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஒரே ஒரு அலுவலர்
அதன்பிறகு அந்த கட்டிடங்கள் மத்தியஅரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்துக்குட்பட்ட காரைக்குடி சர்வதேச சங்கத்துக்கு வாடகைக்கு விடப்பட்டன. அச்சங்கம் சார்பில் பீரோ, கட்டில், சோப்பு, காலணி, ஹாலோ பிளாக் கல், தச்சு தொழில்கள் போன்றவை நடந்து வந்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்தனர். அதன்பிறகு கண்டனூர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் மையக் கட்டிடங்கள் பயன்பாடின்றி மூடிக் கிடக்கின்றன. இங்கு தற்போது ஒரு அலுவலர் மட்டும் பணிபுரிகிறார். மேலும் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களும் வீணாகி வருகின்றன.
இரவில் சமூகவிரோதச் செயல்களும் நடப்பதாக அப்பகுதியினர் புகார் தெரி விக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் புதிதாகத் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான ஜி.பாஸ்கரன் கிராமத் தொழில் மையத்தில் தொழில் கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
இதுகுறித்து கண்டனூர் பகுதி மக்கள் கூறியதாவது: இங்கு தொழில்கள் தொடங்காததால் எங்கள் பகுதி தொடர்ந்து பின்தங்கிேய உள்ளது. தனியார் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கினால் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
தொழில் தொடங்க நடவடிக்கை
இதுகுறித்து கதர் கிராமத்தொழில்கள் நலவாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமைச்சரின் முயற்சியால் தற்போது ரூ.28 லட்சத்தில் ஷாம்பு, சானிட்டரி தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சிலர் தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT