Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM
கரோனா காலத்திலும் தமிழக தொழில்துறை ரூ.45 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கடலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
2015-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அரசால் ரூ.2.42 லட்சம் கோடிக்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48 நிறுவனங்கள் தொழில் துறை சார்ந்தது. மற்றவை மின்சக்தி தொடர்புள்ளவை. மீதம் 74,000 கோடி ரூபாய் தொழில் துறையில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 32 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கி உள்ளன.
2019-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு 302 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 85 சதவீதம் நிறுவனங்கள் கட்டிடம் கட்டுதல் மற்றும் உற்பத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 28 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன்மூலமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இதுதொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடிபல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
தொழில் மேம்பாட்டு மையம் தமிழகத்துக்கு தொழில் வளர்ச்சிக்கு 14-வது இடம் அளித்துள்ளது உண்மைதான். ஆனால், நாம் அதில் 92 மதிப்பெண்களை அதில் பெற்றுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல் நாம் மோசமான நிலையில் இல்லை. அவர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். தமிழக அரசு தொழில் கொள்கை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்ட்வேர் கொள்கை, தொழில்நுட்ப கொள்கை, வர்த்தகக் கொள்கை, ஒற்றை சாளர அனுமதி, ஆன்லைன் அனுமதி போன்ற தொழில் கொள்கைகளை வகுத்து உடனுக்குடன் அனுமதி வழங்கி வருகிறது.
கரோனா பாதிப்பு காலத்திலும் தமிழகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கரோனா காலத்திலேயும் மகாராஷ்டிராவை விட அதிகமான முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளது. இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT