Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM
தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் ரியாஸூதீன்(18). தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை.யில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள், 2021-ல் நாசா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதுகுறித்து மாணவர் ரியாஸூதீன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாசா விண்வெளி மையம் மற்றும், 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து நடத்திய 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சிப் போட்டிகளில் 73 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், நான் உருவாக்கிய விஷன்- 1, விஷன்- 2 என்ற 2 செயற்கைக்கோள்கள் தேர்வாகியுள்ளதாக, நாசா அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த 2 செயற்கைக்கோள்களும் தலா 37 மி.மீ உயரமும், 33 கிராம் எடையும் கொண்டவை. இதற்கு, எடையில் சிறியது என பொருள்படும் 'பெமிடோ' என பெயரிடப்பட்டுள்ளது. இது டெக்னாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செயற்கைக்கோள்.
செயற்கைக்கோள் விஷன்- 1 பாலி எதரி இமைடு அல்டம் 9085,விஷன்- 2 பாலி எதரி இமைடு அல்டம் 1010 என்று சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைகொண்டு வடிவமைக்கப்பட்டுள் ளன. இதற்கு தேவையான மின்சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து பெறமுடியும். இதில், 11 சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் உள்ள தட்பவெப்பநிலைகள் குறித்த தகவல்களையும், ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மீக் கதிர்களின் தன்மைகளையும் தெரிந்துகொள்ளலாம்.
விஷன்- 1 செயற்கைக்கோள் 2021 ஜூனில் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர்- 7 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதேபோல, விஷன்- 2 செயற்கைக்கோள் ஆர்.பி-6 என்கிற தளத்தில் இருந்து ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்படுகிறது. பள்ளி இறுதியாண்டிலிருந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT