Published : 26 Dec 2020 08:11 PM
Last Updated : 26 Dec 2020 08:11 PM
நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் - நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல் - குடிமராமத்துப் பணிகளில் ஊழல் - பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் போன்றவற்றை மறைப்பதற்காகவே தன்னைப் பற்றி, ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கல்வியைக் கொடுத்துவிட்டால் அந்த மனிதனின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று நினைத்து, அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்தது திமுக ஆட்சி. அதனால்தான் படிப்பு சம்பந்தமான பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது திமுகதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நுழைவுத்தேர்வு எந்த ரூபத்திலும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் காவிக் கொள்கை வருகிறது என்று தடுக்கப் போராடுகிறோம். இருமொழிக் கொள்கைதான் ஏற்ற கொள்கை. மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களை முடக்கும் கொள்கை என்று தொடர்ந்து முழங்கி வருகிறோம். இந்தித் திணிப்பு தமிழ் மாணவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சியையும் தடுக்கும் தந்திரம் என்பதை எச்சரித்தே வருகிறோம். தமிழக இளைஞரின் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு தடுக்கும் ஆபத்தை எச்சரித்துக் கொண்டே இருக்கிறோம்.
எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திமுகவின் ஒரே கொள்கை. அந்தக் கொள்கைக்காகவே இயக்கம் தோன்றியது. ஆளும் கட்சியாக இருந்தால் இதனைச் செயல்படுத்துவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் இதனைச் செயல்படுத்த வைப்போம். அதனால்தான் தமிழ்நாட்டு மக்களின் இதய சிம்மாசனத்தில் திமுக நிரந்தரமாக அமர்ந்துள்ளது.
இன்றைக்கு மத்தியில் உள்ள பாஜக அரசாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி உரிமையை, வேலை உரிமையைச் சிதைக்கும் ஆட்சியாக இருக்கிறது. நீட் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கனவைச் சிதைத்தார்கள். புதிய கல்விக் கொள்கை மூலமாகப் பள்ளி, கல்லூரிக் கனவுகளையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள். ரயில்வே, அஞ்சல்துறை போன்ற மத்தியத் துறைகளில் தமிழக இளைஞரின் வேலை வாய்ப்புகளைச் சதி செய்து தடுக்கிறார்கள். இவை அனைத்துக்கும் அதிமுக அரசு தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தொடருமானால் மீண்டும் 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்குத் தமிழர்கள் தள்ளப்படுவோம்.
தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் அடமானம் வைத்து முடித்துவிட்டு, கூட்டணி வேறு - கொள்கை வேறு என்று புதுமாதிரியான விளக்கங்களை பழனிசாமி சொல்ல ஆரம்பித்துள்ளார். இனிமேல் அவருக்குக் கொள்கை இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
நான்காண்டு காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி, இந்தி எதிர்ப்பு, நிதி தன்னாட்சி, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய அனைத்தையும் பாஜக அரசுடன் சேர்ந்து சிதைத்துவிட்டார் பழனிசாமி. இனி அவர் அடகு வைப்பதற்கு எதுவும் இல்லை. பதவி நாற்காலி காலியாகும் நிலையில் கொள்கை பேசத் தொடங்கி இருக்கிறார். அவருக்கும் கொள்கைக்கும் ரொம்ப தூரம். துரோகத்துக்கும் அவருக்கும்தான் ரொம்ப நெருக்கம்.
காவிரிப் பிரச்சினையிலேயே ஏராளமான துரோகத்தை அவர் செய்துள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நாங்கள் காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் என்ற ஒரு கர்வம் இருக்கும். தலைவர் கருணாநிதியே காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்தவர்தான். அதனால்தான் காவிரி உரிமையை மீட்க அயராது பாடுபட்டார். தலைவர் சொல்வார், 'நான் பிறந்தபோதுதான் காவிரி ஒப்பந்தமும் உருவானது' என்று சொல்வார்.
2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது தமிழக அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. நமது மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை இது என்பதைச் சொல்லவில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018ஆம் ஆண்டு வந்தது.
அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு இதனைச் செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர் பழனிசாமியும் மத்திய அரசைக் கேட்கவில்லை.
உடனே அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுகதான். தமிழகம் வந்த பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை திமுக நடத்தியது. திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்னோம். மத்திய அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கி இருக்கிறது. அதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. மத்திய அரசின் ஜல்சக்தி துறையோடு இதனைச் சேர்த்துவிட்டார்கள்.
அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட மிக மோசமாக மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்துக் கொண்டு பிரதமரைப் பார்க்கிறது கர்நாடக அரசு. ஆனால், தமிழகக் கட்சிகளை அழைத்துச் சென்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை.
கிருஷ்ணராஜசாகர் அணையை விட மேகேதாட்டு அணை பெரியது. இது காவிரியை மொத்தமாகத் தடுத்துவிடும். இந்த உண்மையை எடப்பாடி அரசு உணரவில்லை. முதுகெலும்பு இல்லாமல் பாஜக அரசுக்குத் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. காவிரி என்ற ஒரே ஒரு விவகாரத்திலேயே இவ்வளவு துரோகம்.
இந்த துரோகத்தை மறைக்கத்தான் ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் சொல்கிறார் பழனிசாமி. அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண்மையைச் சிதைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிப்பாரா? ஆதரிக்க மாட்டார். அதை மீறி ஆதரிக்கிறார் என்றால் அவர் உண்மையான விவசாயி அல்ல என்பது இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வருகிறார்கள். இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை என்ற எம்.எஸ்.பி. வேளாண் சட்டங்களில் இருக்கிறது. அது நீக்கப்படவில்லை என்று பிரதமரும், மத்திய அமைச்சர்களும் கூறி வந்தார்கள். ஆனால், நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி “குறைந்தபட்ச ஆதார விலை பற்றி விவசாயிகளுக்குச் சந்தேகம் இருக்கலாம்” என்று முதன்முதலாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆனால், நம்மூர் முதல்வர் பழனிசாமி வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் சட்டம் என்கிறார். டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரில் போராடுகிறார்கள். அரை வயிறும் குறை வயிறுமாக நின்று திறந்த வெளியில் போராடுகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள். ரத்தத்தில் கையெழுத்திட்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் பழனிசாமி, போராடும் விவசாயிகளைப் பார்த்து தரகர் என்று கூசாமல் திட்டுகிறார். டெல்லிக்குச் சென்று போராடும் விவசாயிகளிடம் இதைச் சொல்ல முடியுமா?
நேற்றைய தினம் மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற இக்கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்குக் கலக்கம். கிராம மக்கள் அதிகம் கூடுவதைப் பார்த்து அமைச்சர்களுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முதல்வர் தனது பினாமிகள் பெயரில் சொத்துகளைக் குவித்திருப்பதைப் பட்டியலிடுகிறோம்.
அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதைப் பட்டியல் போடுகிறோம். அதிமுக ஊழல், கிராம அளவில் சந்தி சிரிக்கிறதே என்பதைத் தடுக்க வழக்குப் போடுகிறார்கள். நேற்று கூட மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்காக வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
திமுக இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படாது. எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பேசுவதற்காக வழக்கு என்றால், இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் இந்த வழக்கைச் சந்திக்கத் தயார்.
ஆனால், மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் கிராம சபைக் கூட்டம் நடக்கும்; நடந்தே தீரும். அதிமுக ஆட்சி குடிமராமத்துப் பணி - தூர்வாரும் பணி என்று கொள்ளையடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு மட்டும் 1600 கோடி ரூபாய்க்கு மேல் தூர்வாருவதற்கும் - குடிமராமத்துப் பணிகளுக்கும் செலவிட்டதாகக் கணக்குக் காட்டுகிறார்கள். ஆனால், மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைக்குப் பகுதிக்குக் கூடப் போகவில்லை.
இந்த லட்சணத்தில்தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணம் இருக்கிறது. விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் நடந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. கேட்டால் ஒப்பந்த ஊழியர்கள் செய்துவிட்டார்கள் என்று திசை திருப்பினார்கள். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை “போலி விவசாயிகளுக்கு” கொடுத்தது பழனிசாமி. அவர் எப்படி உண்மையான விவசாயியாக இருக்க முடியும்?
நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல், உயர் நீதிமன்றமே கண்டித்தது. விவசாயிகளுக்கான நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல். விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல். விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்கான குடிமராமத்துப் பணிகளிலும் ஊழல். இதுதான் போலி விவசாயி பழனிசாமி ஆட்சியின் வேதனைப் பட்டியல்.
இன்றைக்கு சுனாமி நினைவு தினம். இதே தேதியில்தான் பல்வேறு உயிர்களை இயற்கை பேரிடர் பறித்துக் கொண்டு சென்றது. அப்போது முதல்வர் அம்மையார் ஜெயலலிதா. கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர். சுனாமி நிதியாக 21 லட்சம் ரூபாய் அறிவித்து, அதை நான்தான் நேரில் கொண்டு போய் ஜெயலலிதாவைக் கோட்டையில் சந்தித்துக் கொடுத்தேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதப் பணிகளும் செய்யவில்லை. வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படவில்லை. பிறகு திமுக ஆட்சி 2006-ல் பொறுப்பேற்றவுடன் சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியை நானே நேரில் கவனம் செலுத்தி நிறைவேற்றினேன். ஆகவே எந்தப் பேரிடராக இருந்தாலும் முதலில் களத்தில் நிற்பது, மக்களுக்கு உதவ நேசக்கரம் நீட்டுவது திமுக.
இப்போது நிவர் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மக்கள், மீனவர்களின் சோகம் இன்னும் நீங்கவில்லை. விவசாயிகளின் பாதிப்புகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்கவில்லை.
இன்றைக்கு முழு நிவாரணமும் வழங்கவில்லை. திமுகவின் விவசாய அணி போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு இன்று ஒரு செய்தி வருகிறது. பாதிப்புகளைப் பார்வையிட மீண்டும் ஒரு மத்தியக் குழு வருகிறது என்கிறார்கள். ஏற்கெனவே ஒரு மத்தியக் குழு வந்துவிட்டுப் போய்விட்டது. ஒரு பாதிப்பைக் கணக்கிட இன்னும் எத்தனை குழுக்கள் வரும்? இடைக்கால நிவாரணத்தைக் கூடப் பெற விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டுமா?''
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT