Published : 26 Dec 2020 04:38 PM
Last Updated : 26 Dec 2020 04:38 PM
இந்துக்களுக்கு விரோதமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (டிச. 26) செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா 48 நாட்கள் நடைபெறும். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். உடல் வெப்பம் சோதனையிடப்படும். கிருமிநாசினி கொடுக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு வழிமுறைகளைக் கூறியுள்ளது.
நளத்தீர்த்தக் குளத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் எல்லையில் உடல் வெப்பம் சோதனை நடத்தப்படும். சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்கப்படுகிறது. ஆகம விதிப்படி விழா நடைபெறும். சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக்கூடாது என மாநில அரசின் முடிவுகளை எதிர்த்து துணைநிலை ஆளுநர் நீதிமன்றம் சென்றது இதுதான் முதல் முறையாகும். இதேபோல், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கும் தடை விதித்தார்.
புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு எந்தத் தடையுமில்லை. தேசிய அளவிலும் தமிழகத்தையும் பார்க்கும்போது புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு குறைவு. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. கடற்கரைக்கு வருவோர் முகக்கவசம் அணிந்துகொண்டு வரவேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரத்தைக் கொண்ட மாநிலம். புதுச்சேரி மக்கள் அந்த பரம்பரையில் வருபவர்கள்.
தமிழகத்தில் கடற்கரையில் விழா கொண்டாடக் கூடாது என்று சொன்னதற்காக அதனை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. கேரளா, ஆந்திரா, கோவாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை. அரசை எதிர்த்து புகார் அனுப்ப, கிரண்பேடி சிலரைத் தொடர்பு கொண்டு தயாரித்து வைத்துள்ளார். 'மேட்ச் பிக்சிங்' போல் கிரண்பேடி செயல்படுகிறார். முதல்வர், அமைச்சர்களை எதிர்த்து மீம்ஸ் போட கிரண்பேடி சிலரைத் தூண்டி விடுகிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தற்போது கரோனா பரிசோதனை எடுக்கக் கூறுவதை முன்பதிவு செய்வதற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். மத விழாவைத் தடுக்க கிரண்பேடிக்குத் தனிப்பட்ட விரோதம் ஏன்? கிரண்பேடி இந்துக்களின் விரோதியா? இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது.
இந்து மதத்தைப் பரப்பும் ஒரு கட்சி வாய்மூடி மவுனமாக இருந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சியான நாங்கள் பக்தர்களுக்காகப் பாடுபடுகிறோம். 17 ஆயிரம் பேரை 48 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை எடுக்கச் சொன்னால் நடக்கும் காரியமா? கோயில் கோபுர தரிசனத்துக்கே அனுமதிக்கவில்லை. தற்போது காரைக்காலில் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு கிரண்பேடிதான் பொறுப்பு. இந்து மக்கள் சனிபகவானைத் தரிசிப்பதை கிரண்பேடி தடுத்து நிறுத்துவதை புதுச்சேரி மாநில பாஜக அரசு ஆதரிக்கிறதா? தடை செய்வதைப் பார்த்துக்கொண்டு பாஜக ஏன் தூங்குகிறது? அவர்களும் உடந்தையாக இருந்து இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனரா?
கரோனா பரிசோதனையை எதிர்த்து நீதிமன்றத்தில் சில பக்தர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் பரிசோதனை என்ற விதியை நீக்க வேண்டும். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும். இந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படும் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்களை அவமானப்படுத்தும் கிரண்பேடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT